பெருமழையின் காரணமாக டெல்டா பகுதி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகி உள்ளதாக ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நெல் குண்விடால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும், கரும்புக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு ரூ.4,000 வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது அது குறித்து வாய்மூடி மவுனம் காக்கும் அரசாக, தி.மு.க. அரசு விளங்குகிறது.
தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்று 6 மாதங்கள் கடந்த நிலையில் 2021-22-ம் ஆண்டுக்கான, நெல்லுக்கான ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,015 என்றும், 10 விழுக்காடு பிழிதிறன் கொண்ட கரும்புக்கான ஆதார விலை டன்னுக்கு ரூ.2,900 என்றும், அதற்கு குறைவான பிழிதிறன் கொண்ட கரும்பு டன்னுக்கு ரூ.2,755 என்றும் தான் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மற்ற வாக்குறுதிகளை போல் நெல் மற்றும் கரும்புக்கான ஆதார விலை வாக்குறுதியை ஆட்சியின் முடிவில் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற முடிவில் தமிழக அரசு இருந்தால் அது விவசாயிகளுக்கு லாபகரமாக இருக்காது. இதுகுறித்த தி.மு.க.வின் வாக்குறுதி என்பது தற்போதைய கால கட்டத்திற்கு தான் பொருந்தும்.
விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்வதற்காக கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்று திறந்தவெளியில் வைக்கப்பட்ட நிலையில் மழையின் காரணமாக நெல் மூட்டைகள் நனைந்து முளைத்துவிட்டன.
அதே போல் அரசால் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து முளைத்து விட்டன. இவற்றை தவிர்க்கும் பொருட்டு தேவைப்படும் இடங்களில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு உரிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
மேலும் பெருமழையின் காரணமாக டெல்டா பகுதி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். ஆகவே சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அரசு அதிகாரிகளை உடனடியாக அனுப்பி உரிய ஆய்வு செய்து, பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு நிவாரண உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் தி.மு.க. அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
வாக்களித்த விவசாயிகளை வஞ்சிக்காமல், தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரு.2,500 ஆகவும், கரும்புக்கான ஆதார விலையை டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரமாகவும் உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அதே போல் நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டுவரும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனுக்குடன் கொள்முதல் செய்து அதற்குரிய பணத்தை உடனடியாக வழங்கி, விவசாயிகளை விரக்தியில் இருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, தமிழக விவசாயிகள் சார்பிலும், அ.தி.மு.க.வின் சார்பிலும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.