தமிழக அரசின் இயலாமையை மறைக்க ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறை கூறுகிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னையில் கடந்த சனிக்கிழமை இரவு முழுவதும் பெய்த அதி கனமழையால் நகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. அதில் இருந்து தற்போது வரை சென்னை நகரம் சூரியனை காணவில்லை. மேக மூட்டமாக வானம் காணப்பட்டு தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது.
இதனால் பெரும்பாலான இடத்தில் வெள்ளம் வடியாத நிலை உள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து பாதிப்புகள் ஏற்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
சென்னையில் வெள்ளம் வடியாத நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மாநகராட்சியை கண்டித்துள்ளது. இதற்கிடையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்மார்ட் சிட்டி திட்டம், மழைநீர் வடிகால் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து கேள்வி எழுப்பியதுடன், நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த நிலையில், அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘‘திமுக அரசு ஆமை வேகத்தில் செயல்படுகிறது. மக்களின் குறைகளை காது கொடுத்து கேட்பதில்லை. தமிழக அரசின் இயலாமையை மறைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை குறை கூறுகிறார்’’ என்றார்.
நாளை சென்னையில் அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.