முல்லைத்தீவு துணுக்காய் ஆரோக்கியபுரம் பகுதியில் குடிநீர் விநியோகத்திற்காக அமைக்கப்பட்ட நீர்த்தாங்கி குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படாது செயலிழந்த நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் குடிநீரை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள மிகவும் பின் தங்கிய கிராமங்களில் ஒன்றாகக் காணப்படும் ஆரோக்கியபுரம் பகுதியில் வசித்தவரும் குடும்பங்களுக்கான குடிநீர் பிரசினையை தீர்ப்பதற்காக அப்பகுதியில் நீர்த்தாங்கி ஒன்று அமைக்கப்பட்டது.
அப்பகுதியில் நிலவுகின்ற குடிநீர்த் தேவை தொடர்பில் அப்பகுதி மக்கள் கடந்த 2010ம் ஆண்டு விடுத்த கோரிக்கையையடுத்து 2013ம் ஆண்டு துணுக்காய் பிரதேச சபையினால் குடிநீர் விநியோகத்திற்கான நீர்த்தாங்கி அமைக்கப்பட்டு குடிநீர் விநியோக குழாய்களும் பொருத்தப்பட்டன.
2014ம் ஆண்டில் குடிநீர் விநியோகம் பரிட்சாத்தமாக மேற்கொள்ளப்பட்டபோதும் இன்று வரை அதனூடாக குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படாது இடை நடுவில் விடப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குடிநீர் தேவையுள்ள அப்பகுதியில் பெரியளவில் நிதிகளை செலவிட்டு அமைக்கப்பட்ட குடிநீர் விநியோகத்திட்டம் செலிழந்து காணப்படுவதாகவும் இதனால் குடிநீர் பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனை உரிய அதிகாரிகள் கவனத்திலெடுத்து குடிநீர் விநியோகத்தினை ஏற்படுத்தித்தருமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை இது குறித்து முல்லைத்தீவு உள்ளுராட்சி உதவி ஆணையாளரிடம் கேட்டபோது, குறித்த கிராமத்திற்கான குடிநீர் விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.