திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்றுமுன்தினம் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகளில் மொத்தம் 26 ஆயிரத்து 242 திவ்ய தரிசன பக்தர்கள் பாத யாத்திரையாக திருமலைக்கு வந்தனர். திருமலையில் உள்ள தரிசன கவுண்ட்டர்களில் பக்தர்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் தரிசனத்துக்காக காத்திருந்தனர். அதேபோல் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்திருந்தனர்.வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. தங்கும் விடுதிகள் கிடைக்காமல் பக்தர்கள் அவதிப்பட்டனர். திருமலையில் உள்ள 3 ‘அமைனிட்டி’ காம்ப்ளக்சிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் தங்களுக்கு தேவையான விடுதிகளை முன்பதிவு செய்வதற்காக மத்திய வரவேற்பு மையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பக்தர்களுக்கு உணவு, குடிநீர், பால், டீ ஆகியவற்றை ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் வழங்கினர்.
விடுதிகள் கிடைக்காத பக்தர்கள் சத்திரங்கள், பூங்காக்கள் ஆகியவற்றில் தங்கி ஓய்வெடுத்து தெப்பக்குளத்தில் குளித்து தரிசனத்துக்கு சென்றதை காண முடிந்தது. தலைமுடி காணிக்கை செலுத்தும் கல்யாண கட்டாக்களில் பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் காத்திருந்தனர். அன்று ஒரே நாளில் மொத்தம் 88 ஆயிரத்து 641 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இலவச தரிசனத்துக்கு 15 மணி நேரமும், திவ்ய தரிசனத்துக்கு 10 மணி நேரமும், 300 ரூபாய் கட்டண பிரத்யேக பிரவேச தரிசன பக்தர்களுக்கு 4 மணி நேரமும் ஆனது. ஒரு நாள் உண்டியல் வருமானமாக ரூ.3 கோடியே 28 லட்சம் கிடைத்ததாகவும், அன்னதானக்கூடத்தில் 67 ஆயிரம் பேர் இலவசமாக உணவு சாப்பிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.