சென்னையில் அரசு அலுவலகங்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்திவாசிய சேவை துறை தவிர்த்து அனைத்துத் துறைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தலைநகர் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன.
தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் தேங்கியதால் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. சென்னையில், இன்றும் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இன்று அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவின், பொதுப் போக்குவரத்து, மின்சாரம், உள்ளாட்சித் துறை, மருத்துவத் துறை, வருவாய்த் துறை போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரசுத் துறைகள் தவிர்த்து சென்னை மாவட்டத்திலுள்ள இதர அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மழை பாதிப்பைக் கருத்தில் கொண்டு தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும். இல்லையேல் வாய்ப்பிருந்தால் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.