பெரியாறு அணை பிரச்சினையில் அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு ஏற்புடையது அல்ல: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

185 0

பெரியாறு அணை விஷயத்தில் அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்டது போல் திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறு இருக்கையில் அதிமுக மீது அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டுகளை முன் வைப்பது ஏற்புடையது அல்ல என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

பெரியகுளம் கைலாசபட்டி அருகே ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீடு உள்ளது. அங்கு அவர் நேற்று மாலை செய்தியாளர் களிடம் கூறியதாவது:

பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் போதெல்லாம் நீர் மட்டத்தை 142 அடிக்கு உயர்த்த ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி பேபி அணையை பலப்படுத்திவிட்டு, பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்க முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் கேரள அரசு அனுமதி அளிக்கவில்லை.

பெரியாறு அணை விஷயத்தில் அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைப் போன்று திமுக ஆட்சியில் எடுக்கப்படவில்லை. இவ்வாறு இருக்கையில் அதிமுக மீதும், பொறுப்பாளர்கள் மீதும் அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டுகளை முன் வைப்பது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தான் பெரியாறு அணையின் நீர்மட்டம் மூன்று முறை 142 அடியாக உயர்த்தப்பட்டது. அப்போது இரு மாநில உறவுகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. தற்போது இரு மாநில உறவுகள் மேம்பாடு என்ற பெயரில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தாமல் 138 அடியிலேயே கேரளாவுக்குத் திறந்து விடப்பட்டது கண்டிக்கத்தக்கது.

பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டப்படும் என்று கேரள முதல்வர் தெரிவித்ததை ஏற்க முடியாது. ஒரு இடத்தில் உருவாகும் ஆறு, அடுத்த மாநிலங்களுக்குச் செல்லும்போது அம்மாநிலங்களின் அனுமதியின்றி இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்த முடியாது. அணைக்கு நான் செல்லவில்லை என்று அமைச்சர் துரைமுருகன் கூறியது தவறு. பலமுறை அணைக்குச் சென்று ஆய்வு செய்து நீரைத் திறந்துவிட்டுள்ளேன். என்னுடன் தேனி ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இருந்துள்ளனர். கேரளாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது குறித்து தமிழக அரசு வெளிப்படையாக விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றார்.