வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தீவகம் தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில், கடற்படையினரின் தேவைக்காக, இன்று காலை, 3 இடங்களில் ஒரே நாளில் பொதுமக்களுக்கு சொந்தமான பின்வரும் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக, நில அளவை திணைக்களத்தினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஜே/10 கிராமசேவையாளர் பிரிவு – அல்லைப்பிட்டியில், 7 பரப்பு காணியும் ஜே/11 பிரிவு – மண்கும்பானில், 4 பரப்பு காணியும் அதேபோல் புங்குடுதீவு – வல்லன் பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளும், கடற்படையினரின் தேவைகளுக்காக காணி சுவீகரிக்கப்பதற்காக நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள், இன்று காலை 9.30 மணியளவில், அவ்விடத்துக்கு வருகை தந்தனர்.
இதன் போது, பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் ஆகியோர், திணைக்கள வாகனத்தை தடுத்து நிறுத்தி, எதிர்ப்பு தெரிவித்ததால், காணி சுவீகரிப்பு செயற்பாடு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
காணி சுவீகரிப்பு எதிர்ப்பு முயற்சியில், பாராளுமன்ற உறுப்பினர்கள், தீவகப் பகுதி மக்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.