60 வயதுக்கும் மேற்பட்ட பல்வேறான நோய் அறிகுறிகள் தென்படும் அல்லது நீண்டகாலமாக நோய்களால் பீடிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்றாவது டோஸ் வழங்குவதற்கு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தீர்மானித்துள்ளார்.
இவ்வாறு மூன்றாவது டோஸாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியே வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
“ 60 வயதுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசியை வழங்குமாறு, பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ, சுகாதார பணிப்பாளர் நாயக்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்பிரகாரமே மூன்றாவது டோஸ் வழங்கப்படவுள்ளது.
அதனடிப்படையில், 60 வயதுக்கும் மேற்பட்ட எம்.பிக்களுக்கு இராணுவத் தலைமையகத்தில், இன்று (08) முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரையிலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரையிலும் மூன்றாவது தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 12ஆம் திகதியன்று வரவு- செலவுத்திட்டம், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதால், அன்றையதினம் மட்டும் நேரத்தில் சிறு மாற்றங்கள் செய்யப்படலாமென தகவல்கள் தெரிவிக்கின்றன.
60 வயதுக்கும் மேற்பட்ட எம்.பிக்களுக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர், ஏனைய எம்.பிகளுக்கும் பணியாட் தொகுதியினருக்கும், இதர உறுப்பினர்களுக்கும் மூன்றாவது தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என்றும் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.