அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தினால் எவரும் பட்டினியால் உயிரிழக்கவில்லை. சீனி, அரிசி ஆகிய பொருட்களின் விலை அதிகரிப்பு பெரியதொரு விடயமல்ல.
கொவிட் தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாத்துள்ளமைக்கு அரசாங்கத்திற்கு நாட்டு மக்கள் அனைவரும் நன்றி தெரிவிக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (7 ) இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்தன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்தி;ட்டத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது,மக்களிடமிருந்து அரசாங்கம் நிவாரணம் பெற வேண்டும் என நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ குறிப்பிடவில்லை.
மக்கள் மீது சுமை செலுத்தாத வகையில் வரவு-செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டது ஊடகங்களில் திரிபுப்படுத்தப்பட்டுள்ளன.
வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அத்தியாவசிய பொருட்களை கட்டுப்படுத்தும் காலத்தில் நாம் தற்போது இல்லை. வர்த்தமானி ஊடாக வர்த்தகர்களை கட்டுப்படுத்த முடியாது.
அதன் காரணமாக தான் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்ட விலைக்கமைய விற்பனை நடவடிக்கைகள் இடம்பெறாமல் இருக்கும் சூழல் காணப்படுகிறது.
வர்த்தமானி அறிவித்தல் நீக்கப்பட்டு சந்தையில் போட்டித்தன்மையான சூழல் தற்போது ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. கொவிட் தாக்கத்தின் காரணமாக கடந்த 2 வருட காலமாக முழு உலகமும் உற்பத்தி துறையில் பாதிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான நிலையில் போலியாக வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவது பயனற்றது. பொருட்களின் விலையை நிர்ணயித்தால் ,சந்தையி;ல் பொருள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படும்.எதிர்பார்க்காத அளவு பொருட்களின் விலை அதிகரிக்கப்படும்.
யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தம் தொட்பில் சமூகத்தின் மத்தியில் தவறான நிலைப்பாடு காணப்படுகிறது.மின்பாவனையாளர்களுக்கு குறைந்த விலையில் மின்விநியோகிப்பது கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் பிரதான இலக்காகும்.தற்போது யுகதனவி விவகாரம் அரசியலாக்கப்பட்டுள்ளது.
யுகதனவி மின்நிலைய பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தம் தொடர்பில் பங்காளி கட்சி உறுப்பினர்கள் அமைச்சரவையில் பேசாமல், வீதியில் பேசுவது பயனற்றது.அமைச்சரவை அமைச்சர்கள் அனைரும் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.ஆனால் இவர்கள் அமைச்சரவை கூட்டுப் பொறுப்பிற்கு முரனாக செயற்படுகிறார்கள்.
ஜே.ஆர் ஜயவர்தனாவின் ஆட்சியை விட தற்போதைய அரசாங்கம் மோசடியானது என பங்காளி கட்சி தலைவர்கள் குறிப்பிட்டுக் கொண்டு அமைச்சு பதவிகளை தொடர்ந்து வகிக்கிறார்கள்.
மோசடியான அரசாங்கத்தில் ஏன் இன்னும் அமைச்சு பதவிகளை வகிக்கிறார்கள்.தாராளமாக அமைச்சு பதவிகளை துறந்து அரசாங்கத்தில் இருந்து வெளியேறலாம்.அதனை விடுத்து அரசாங்கத்தில் இருந்துக் கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது தவறான அரசியல் செயற்பாடாகும்.
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தினால் எவரும் உயிரிழக்கவில்லை.சீனி,அரிசி,சீமெந்து ஆகியவை பெரும் பிரச்சினையல்ல அவற்றை காட்டிலும் தீர்க்க வேண்டிய பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. கொவிட்-19 தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாத்தற்கு அரசாங்கத்திற்கு மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும்.என்றார்.