பத்திரிகையாளர்கள் மீது தொடரும் தாக்குதல்களின் புது வடிவம்

438 0

201607111132467773_Truth-in-danger-New-techniques-used-to-stop-journalists_SECVPFசமூகத்தின் நான்காம் தூண் என வர்ணிக்கப்படும் பத்திரிகை துறையினரை குறிவைத்து உலகின் பல்வேறு நாடுகளில் புது வடிவிலான தாக்குதல்கள் தொடுக்கப்படுவதாக பத்திரிகை தணிக்கை தொடர்பான செய்திகளை வெளியிடும் பருவ இதழ் கவலை தெரிவித்துள்ளது.

வங்காளதேசம், இந்தியா மற்றும் உலகின் பல நாடுகளில் சமூக அவலங்களையும், அதிகாரவர்க்கத்தினரின் அத்துமீறலையும், பகல் கொள்ளையையும் வெளியுலகுக்கு தோலுரித்துக் காட்ட முற்படும் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டும், தாக்கப்பட்டும் வருகின்றனர்.

இதுபோன்ற நேரடி தாக்குதல்கள் தவிர ஆள்கடத்தல், பொருளாதார நிர்பந்தங்கள் மற்றும் அவதூறு வழக்கு என்ற புதிய ஆயுதங்களை பலர் பத்திரிகையாளர்களுக்கு எதிராக பிரயோகித்து வருவதாக ‘இன்டெக்ஸ் ஆன் சென்சார் ஷிப்’ ( 250th issue of Index on Censorship magazine) என்ற பருவ இதழ் குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக, இந்த காலாண்டு (மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளியாகும்) பருவ இதழின் 250-ம் சிறப்பு பதிப்பு இன்று வெளியாகியுள்ளது.

40 நாடுகளில் பத்திரிகையாளர்களுக்கு எதிரான 35 அடக்குமுறை சம்பவங்களை பட்டியலிட்டுள்ள இந்த சிறப்பிதழில் ‘ஊடக சுதந்திரம்’ பற்றி வெகுவாக ஆய்வு செய்து, ‘உண்மையில் உள்ள ஆபத்து: ஆபத்தில் உள்ள உண்மை’ (“Danger in Truth: Truth in Danger) என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது.

சிரியா உள்ளிட்ட சில நாடுகளில் செய்திகளை சேகரிக்க வெளியில் இருந்துவரும் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. உள்நாட்டு மக்களின்மூலம் செய்தி திரட்ட முயன்றாலும் அவர்களை அவ்வாறு செய்யவிடாமல் தடுக்கும் ஆட்சியாளர்களின் அடக்குமுறை அதிகரித்து வருகிறது.

பலநாடுகளில் பத்திரிகையாளர்களுக்கு உரிய சுதந்திரமும், மரியாதையும் கிடைப்பதில்லை. உண்மையை உலகுக்கு சொல்ல முயற்சிக்கும் பத்திரிகையாளர்கள் தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் முத்திரை குத்தப்படுகிறார்கள்.

இத்தகைய நிலையில் அச்சத்துடனும், ஆபத்துகளுக்கு இடையிலும்தான் உலகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் தங்களது கடமையை செய்ய வேண்டியுள்ளது என அந்த கட்டுரை குற்றம்சாட்டியுள்ளது.