உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு (2017) பிப்ரவரி மாதம் சட்டசபையின் பதவிக்காலம் முடிகிறது. எனவே அங்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு (2017) பிப்ரவரி மாதம் சட்டசபையின் பதவிக்காலம் முடிகிறது. எனவே அங்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
தற்போது அங்கு ஆளும் கட்சியாக உள்ள முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சி, சட்டசபையை விரைவில் கலைத்துவிட்டு தேர்தலை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் உத்தர பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க இப்போதே எல்லா கட்சிகளும் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் குதித்துள்ளன.
உத்தரபிரதேச தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ், (ஐக்கிய ஜனதா தளம்- ராஷ்டீரிய ஜனதா தளம் கூட்டணி), பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றுக்கிடையே 4 முனைப் போட்டி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு உத்தரபிரதேசத்தில் நடக்கும் ஆட்சி கை கொடுக்கும் என்பதால் அங்கு ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதில் பாரதீய ஜனதா மிகவும் தீவிரமாக உள்ளது.
அதை தடுக்க காங்கிரஸ் புதிய முயற்சிகளை தொடங்கி உள்ளது. அதன் ஒரு கட்டமாக உத்தரபிரதேச தேர்தலில் பிரியங்காவை 150-க்கும் மேற்பட்ட கட்டங்களில் பிரசாரம் செய்ய வைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. அதன் மூலம் பிராமணர்கள், முஸ்லிம்கள் வாக்குகளை அதிக அளவில் பெற முடியும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
இதற்கிடையே லக்னோவில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.இதில் தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகளை காங்கிரஸ் எடுக்க உள்ளது. அந்த கூட்டத்தில் ராகுல், பிரியங்கா இருவரும் கலந்து கொள்கிறார்கள்.
கூட்டம் முடிந்ததும் ராகுல், பிரியங்கா இருவரும் அன்றே தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளனர். முதலில் அவர்கள் ஆகஸ்டு 12-ந் தேதி பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் இருந்து பிரசாரத்தை தொடங்குவார்கள் என்று தெரியவந்துள்ளது.
காங்கிரஸ் கட்சி கடந்த 2012-ம் ஆண்டு தேர்தலில் 355 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு 28 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. எனவே இந்த தடவை நிதிஷ்குமார்-லல்லு கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் பாரதீய ஜனதா கட்சி உத்தரபிரதேசத்தில் தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டது. தலைவர்கள் பிரசாரத்துக்காக அம்மாநிலத்தை பா.ஜ.க. தலைவர் அமித்ஷா 5 மண்டலமாக பிரித்துள்ளார்.
அம்மண்டலங்களுக்கு முக்தார் அப்பாஸ் நக்வி, ஸ்மிருதி இராணி, கல்ராஜ் மிஸ்ரா, உமா பாரதி, ராம்சங்கர் கதரியா ஆகிய 5 தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 5 பேரும் 403 தொகுதிகளிலும் ரத யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதனால் உத்தரபிரதே மாநில தேர்தல் களம் அடுத்த மாதம் முதல் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.