பீகார் மாநிலத்தில் பொது மக்கள் குறை தீர்ப்பதற்காக தகவல் ஆணையம் உள்ளது. அந்த ஆணையத்திடம் கொடுக்கப்படும் மனுக்கள் அந்தந்த துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
கசரியா மாவட்டத்தை சேர்ந்த சனோஜ்மிஸ்ரா என்பவர் அந்த தகவல் ஆணையத்தில் மனு ஒன்று கொடுத்திருந்தார். ஆனால் அந்த மனு என்ன ஆனது என்பது அவர்களுக்கு தெரியவில்லை.
இதையடுத்து அவர் தன் மனு மீது உடனடி நடவடிக்கை எடுப்பதற்காக லஞ்சம் கொடுக்க முடிவு செய்தார். அதன்படி அவர் பதிவுத் தபாலில் ரூ.500 லஞ்சம் அனுப்பி வைத்தார்.
அதோடு அவர் ஒரு கடிதமும் எழுதியிருந்தார். அதில் அவர், “500 ரூபாயை உங்கள் குழுந்தைகளுக்கு இனிப்பு வாங்க வைத்துக் கொள்ளுங்கள். என் மனு மீதும் உடனடியாக நடவடிக்கை எடுங்கள்” என்று எழுதியிருந்தார்.
தபாலில் ரூ.500 லஞ்சம் வந்திருப்பதை அறிந்த தகவல் ஆணைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி சனோஜ் மிஸ்ரா மீது அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர்.
மிஸ்ராவை கைது செய்வது பற்றி போலீசார் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.