அமெரிக்க மக்கள் தன்னை சிறந்த மனிதனாகவும், சிறந்த ஜனாதிபதியாகவும் ஆக்கி விட்டீர்கள்- பராக் ஒபாமா

298 0

 

obama-01-11-01-2017அமெரிக்க மக்கள் தன்னை சிறந்த மனிதனாகவும், சிறந்த ஜனாதிபதியாகவும் ஆக்கி விட்டீர்கள் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது இறுதி உரையில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் பதவி காலம் ஜனவரி 20ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. புதிய ஜனாதிபதியாக தேர்வுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் விரைவில் பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில் சிகாகோவில் நடந்த வழியனுப்பு விழா நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது இறுதி உரையை இன்று நிகழ்த்தினார்.

கூடியிருந்த ஆயிரக்கணக்கான அமெரிக்க மக்களிடையே பேசிய ஒபாமா, அமெரிக்க மக்கள் தன்னை சிறந்த மனிதனாகவும், சிறந்த ஜனாதிபதியாகவும் மாற்றி உள்ளதாகவும் நாள்தோறும் தனக்கு பல விடயங்களை கற்றுக் கொடுத்துள்ளதற்காகவும், அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.

கடந்த சில வாரங்களாக தானும் தனது மனைவியும் பாராட்டு மழையில் நனைந்து வருவதாகவும் ஒபாமா கூறினார்.

தற்போதைய நிலையில் அமெரிக்கா பலமான இடத்தில் உள்ளதாகவும் வரலாற்றிலேயே அதிக அளவிலான வேலைவாய்ப்பை அமெரிக்கா உருவாக்கி உள்ளதாகவும் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மக்களால் தான் அமெரிக்கா பலமான நிலையை அடைந்துள்ளது எனவும் இந்த வளர்ச்சி போதாது இன்னும் வளர வேண்டும் எனவும் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஜனநாயகத்தின் மூலமே வளர்ச்சியை அடைய முடியும் என தெரிவித்த ஒபாமா பயங்கரவாதம் ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய சவாலாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனை குழந்தைகளுக்கு எடுத்துரைத்து அவர்களை திறமையானவர்களாக வளர்க்க வேண்டும் எனவும் மக்கள் ஒருங்கிணைந்தால் மட்டுமே மாற்றங்களும், வளர்ச்சிகளும் சாத்தியமாகும் எனவும் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமெரிக்காவில் குடியேறியவர்களின் குழந்தைகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் அமெரிக்க வளர்ச்சியில் குடியேறியவர்களின் பங்கு முக்கியமானது எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 8 ஆண்டுகளில் பயங்கரவாத தாக்குதல் ஏதும் நடத்தப்படவில்லை என தெரிவித்த ஒபாமா சட்டங்கள் மட்டும் போதாது மனங்கள் மாற வேண்டும் எனவும் பயங்கரவாதம் அமெரிக்காவில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஒபாமா உரையாற்றிக் கொண்டிருந்த போது அவரது ஆதரவாளர்கள் பலர், அவர் மேலும் 4 ஆண்டுகள் ஜனாதிபதியாக நீட்டிக்க வேண்டும் என கோஷமிட்டபோது ஆதரவாளர்களின் கோரிக்கைப்படி அடுத்த 4 ஆண்டுகள் ஜனாதிபதியாக இருக்க முடியாது தனது நலனில் அக்கறை கொண்டவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நேரம் இது என ஒபாமா தெரிவித்துள்ளார்.