வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் இலங்கைப் பெண்ணொருவரின் சம்பள நிலுவைத் தொகை வழங்கி வைக்கப்பட்டது

301 0

foreign-11-01-2017சவூதி அரேபியாவில், சம்பளம் இல்லாமல் பணியாற்றிய இலங்கைப் பெண்ணொருவரின் சம்பள நிலுவைத் தொகை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் சம்பளம் இல்லாமல் பணியாற்றிய கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய செல்லத்துரை ஜெக்லின் எனும் பணிப்பெண்ணின் சம்பள நிலுவைத் தொகை, நேற்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

ஒரு குழந்தையின் தாயான ஜெக்லின் கடந்த 2013ஆம் ஆண்டு வீட்டுப் பணிப்பெண்ணாக வெளிநாட்டிற்குப் பயணமானார். அங்கு அவர் பணியாற்றிய வீட்டு உரிமையாளரினால் முதல் வருடத்துக்கான சம்பளம் வழங்கப்பட்டது. எனினும் இரண்டாம் வருடம் முதல் அவருக்கான சம்பளம் வழங்கப்படவில்லை. இது தொடர்பில் ஜெக்லின் ரியாத் நகரில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் குடும்ப உறுப்பினர் ஊடக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியம் ஆகியவற்றில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதற்கமைய தூதரகத்தினால் அந்நாட்டு தொழிலாளர் நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஜெக்லினின் சம்பள நிலுவைப் பணமான 6 இலட்சத்து 77 ஆயிரத்து 167 ரூபா பணத்தினை, குறித்த பெண் வேலை செய்த வீட்டு உரிமையாளரிடமிருந்து பெற்று, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினர் ஜெக்லீனிடம் ஒப்படைத்துள்ளனர்.