நுவரெலிய மாவட்டம் அக்கரப்பத்தனை கிளாஸ்கோ ஆகுரோவா தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் (காணொளி)

309 0

hationநுவரெலிய மாவட்டம் அக்கரப்பத்தனை கிளாஸ்கோ ஆகுரோவா தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக அத்தோட்டத்தின் தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

கூட்டு ஒப்பந்த புதிய சம்பளம் அடிப்படையில் திறன் கொடுப்பனவு 140 ரூபாவை தமது சம்பள பற்றுச்சீட்டில் உள்ளடக்க மறுத்தமையினால், அக்கரப்பத்தனை  கிளாஸ்கோ ஆகுரோவா தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக அத்தோட்டத்தின் தொழிலாளர்கள் 100ற்கும் மேற்பட்டோர் இன்று டயகம தலவாக்கலை பிரதான வீதியின் ஆகுரோவா சந்தியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கூட்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட பொழுது திறன் கொடுப்பனவு என 140 ரூபா உள்ளடங்கப்பட்டிருந்ததாகவும்  நாளொன்றுக்கு 18 கிலோவுக்கு அதிகமாக தேயிலை கொழுந்து கொய்யப்படும் பொழுது இந்த திறன் கொடுப்பனவான 140 ரூபா வழங்கப்பட வேண்டும் எனவும் கையொப்பம் இடப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் ஆகுரோவா தோட்ட நிர்வாகம் இந்த திறன் கொடுப்பனவான 140 ரூபாவை வழங்க மறுத்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திறன் கொடுப்பனவான 140 ரூபாவை நிர்வாகம் பெற்றுத்தரும் வரை தமது சம்பள பணத்தை பெறப்போவதில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இவ்விடயம் தொடர்பில் தொழில் திணைக்களத்திற்கு அறிவித்து தீர்வு கிடைக்கும் வரை பொறுத்திருக்குமாறு தோட்ட அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து கவனயீர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.