பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் விரைவில் திருத்தம் , அரசு இணக்கம்

294 0

lawபயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக, புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான விரைவில் திருத்தங்களைச் செய்ய அரசாங்கம் இணங்கியுள்ளது.

புதிதாக கொண்டு வரப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான வரைவு ஆவணம் கடந்த ஆண்டு செப்டெம்பரில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த வரைவு ஆவணம், வெளியே கசிந்த நிலையில், அதில் இடம்பெற்றிருந்த பல்வேறு விடயங்கள் குறித்து கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையிலேயே, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட மூல வரைவில் திருத்தங்களைச் செய்ய அரசாங்கம் இணங்கியுள்ளது.

இந்த திருத்தங்கள் தொடர்பாக, நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடந்த தேசிய பாதுகாப்புத் தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் சூடான விவாதங்கள் நடந்ததாக, துறைசார் கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் ஒருவரிடம் இருந்து முதல் வாக்குமூலம் பெறுவதற்கு முன்னதாக, சட்டவாளரை அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில விதிமுறைகள் தொடர்பாக இன்னமும் முடிவு எடுக்கப்படாமலேயே நேற்றைய கூட்டம் முடிவடைந்தது.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டவுடன், சட்டவாளரைச் சந்திக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி என்பன, துறைசார் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளன.

எனினும், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் திருத்தங்களுடன் நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

இந்த திருத்தங்களுக்கு அமைச்சரவை அனுமதி பெறப்பட்ட பின்னர், நாடாளுமன்றத்தில் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு குறித்து அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் கவலை வெளியிட்டிருந்த நிலையிலேயே, அதில் சில திருத்தங்களை செய்ய அரசாங்கம் இணங்கியுள்ளது.