முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக ஐந்து வழக்குகள் மார்ச் மாதம் 21ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக தமது சொத்து விபரங்களை ஜனாதிபதி செயலகத்திற்கு சமர்ப்பிக்காமை தொடர்பில் ஜொன்ஸ்டனுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளை எதிர்வரும் மார்ச் மாதம் 21ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு பிரதான நீதவான் லால் பண்டார நேற்று உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணைகளின் முதலாம் சாட்சியாளர் உடல் நலக் குறைவினால் நேற்று நீதிமன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை.
2010, 2011, 2012, 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் சொத்து பொறுப்பு விபரங்களை ஜனாதிபதி செயகலத்திடம் சமர்ப்பிக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு சொத்து பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவில்லை என லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் திகதி ஐந்து வழக்குகளை தொடர்ந்திருந்தது.
இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரச சொத்துக்களை மோசடி செய்தமை, சதொச நிறுவனத்தில் நிதி மோசடி செய்தமை உள்ளிட்ட மேலும் பல குற்றச்சாட்டுக்கள் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மீது சுமத்தப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.