பெண் குழந்தைகளை சமூகத்தில் தன்னம்பிக்கை மற்றும் தைரியமுள்ளவர்களாக வளர்ப்பது பெற்றோரின் முக்கிய கடமையாகும் என கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
சமூக நலத்துறை மற்றும் யங் இந்தியன்ஸ், யுனிசெப் ஆகியவை இணைந்து நடத்திய குழந்தைகள் பாதுகாப்பு குறித்த தூத்துக்குடி மாவட்ட ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாம் தூத்துக்குடி அறிஞர் அண்ணா மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடந்தது.
கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட சமூகநல அலுவலர் தனலட்சுமி வரவேற்றார். முகாமினை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில், கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
குழந்தைகளை பாராட்டி வளர்க்கும் பெற்றோரே குழந்தைகளுக்கு எது சரியானது, எது தவறானது என்பதை எடுத்துச்சொல்லி வளர்த்திடவேண்டும். பெண் குழந்தைகளை சமூகத்தில் தன்னம்பிக்கை மற்றும் தைரியமுள்ளவர்களாக வளர்ப்பது பெற்றோரின் முக்கிய கடமையாகும். பெண் குழந்தைகளின் திருமண வயதை 21 ஆக உயர்த்திட மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இதனை கண்டிப்பாக நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும். இதன்மூலமாக பெண் குழந்தைகள் தாங்கள் நினைத்தபடி மேல்படிப்பு போன்றவற்றை படித்திடலாம்.
சமூகத்தில் ஆங்காங்கே நடைபெறும் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த அனைவரும் முழுமையாக ஒத்துழைக்கவேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகள் குழந்தைகள் திருமணம் குறித்து தகவல் தெரிந்தால், அதனை அதிகாரிகளிடம் சொன்னால் நமக்கு கிடைக்கும் ஓட்டு கிடைக்காமல் போய்விடுமோ என்று எண்ணாமல், அந்த சிறுகுழந்தையின் எதிர் காலத்தை கருத்தில்கொண்டு செயல்படவேண்டும். குழந்தைகளை குற்றச்செயல்களில் ஈடுபடுத்துவர்களை கண்டறிந்து தடுத்திடவேண்டும்.
குழந்தைகளுக்கு முழு பாதுகாப்பான மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தை மாற்றவேண்டும். குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் முன் மாதிரியாக திகழ அனைவரும் ஒத்துழைக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினர்.
அதனை தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைளும் எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் இந்திய அளவில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையில் 6-வது இடத்திலும், சட்டத்துக்கு எதிரான செயல்களில் குழந்தைகள் ஈடுபடுவதில் 2-வது இடத்திலும் இருப்பது கவலை அளிக்கிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக சமூகநலத்துறை திட்டங்கள், ஊட்டச்சத்து உணவு குறித்த கண்காட்சியை கனிமொழி எம்.பி. திறந்து வைத்து பார்வையிட்டார்.
இதில், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., சமூக பாதுகாப்புத்துறை இயக்குநர் வளர்மதி, தமிழ்நாடு, கேரளா யுனிசெப் குழந்தை பாதுகாப்பு நிபுணர் குமரேசன், யங் இந்தியன்ஸ் தலைவர் பொன்குமரன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.