நடராஜா ரவிராஜின் கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக அவரது மனைவி மேன்முறையீட்டு மனுத் தாக்கல்

301 0

downloadமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர்கள் அனைவரும் விடுவித்து விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக அவரது மனைவி மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

குறிப்பாக வழக்கு விசாரணைகளை ஜுரி சபைக்கு விசாரணை செய்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எடுத்த தீர்மானமானது, சட்டத்திற்கு முரணானது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மனைவி சார்பில் ஆஜரான சட்டத்தரணி மொஹான் பாலேந்திரா தெரிவித்துள்ளார்.

இந்த சந்தேகநபர்களுக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததாகவும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான வழக்கொன்றை ஜுரி சபைக்கு விசாரணை செய்வதற்கான அதிகாரம் கிடையாது எனவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வழக்கு மீதான விசாரணைகள் ஜுரி சபைக்கு வழங்கப்பட்டிருந்ததுடன், ஜுரி சபை கடந்த மாதம் 23ஆம் திகதி நள்ளிரவு சந்தேகநபர்கள் நிரபராதிகள் என அறிவித்திருந்தது.

இதையடுத்து அன்றைய தினமே சந்தேகநபர்களை விடுவித்து விடுதலை செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் மூன்று கடற்படை சிப்பாய்களும் அடங்குகின்றனர்.

இந்த ஜுரி சபையில் அங்கம் வகித்த அனைத்து உறுப்பினர்;களும் சிங்களவர்கள் எனவும், அதனாலேயே நியாயம் நிலைநாட்டப்படவில்லை எனவும் குற்றஞ்சுமத்தப்பட்டிருந்தது.

நடராஜா ரவிராஜ் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, மனோ கணேஷன் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் இந்த தீர்ப்புக்கு எதிராக குரல் எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது,