ஆசிரியர்களின் போராட்டத்துக்கு பொலிஸார் இடையூறு செய்து கூடாரங்களை உடைத்தனர்

197 0
அதிபர்-ஆசிரியர் சம்பள முரண்பாடுகளை நீக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர் களுக்கு ஆதரவாக ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் கூடாரம் அமைத்து சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர் குழுவுக்கும் இடையில் இன்று காலை முறுகல் நிலை ஏற்பட்டது.

குறித்த போராட்டக்காரர்களால் அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தை அகற்ற பொலிஸார் முயன்றபோது ஜனாதிபதி செயலக வளாகத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் தமது சத்தியாக்கிரகத்துக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் தொடர் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது என்றும் புறக்கோட்டை பொலிஸ் அதிகாரி கொள்ளைக் கூட்டம் போன்று வந்து நாங்கள் அமைத்த கூடாரத்தை அகற்றினர் என்றும் உயர் நீதிமன்றத்தின் எந்த ஒரு கடிதமும் இல்லாமல் வந்தனர் என்றும் சட்ட நீதிக்கு முன்னுரிமை வழங்காது சரத் வீரசேகரவின் பொலிஸார் இவ்வாறு செயற்படுகின்றனர் என்றும் நீதியை நடைமுறைப்படுத்துவதற்கு முன் பொலிஸாருக்கு நீதியை கற்றுக்கொடுங்கள் நாங்கள் ஆசிரியர்கள் என்றும் ஆசிரியர்களின் குரலை ஒடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் அங்கிருக்க அனுமதித்ததற்கு சந்தோஷப் படவேண்டும் என பொலிஸார் தெரிவித்தனர் என்றும் இன்றைய தினம் இரவு பொலிஸார் இருக்க அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் எங்களை அழைத்துச் சென்று நீதிக்கு அநீதி ஏற்படும் வகையில் செயற்படாமல்  நீதியாக செயற்பட வேண்டும் என்றும் அவ்வாறு செயற்படாவிட்டால் அதற்குச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.