பதின்மூன்று பேரில் ஒரு தமிழர் கூட இல்லை: மனோ எம்.பி

198 0

ஒரே நாடு ஒரே சட்டம் என்பதை நடைமுறையாக்க நியமிக்கப்பட்ட 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியில் தமிழர் ஒருவர் கூட இடம்பெறவில்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
“ஒரே நாடு: ஒரே சட்டம்” என்பதை நடைமுறையாக்க ஆராய்ந்து 28-02-2022 க்கு முன் அறிக்கை சமர்ப்பிக்கும்படி ஜனாதிபதி கோத்தபாய பதின்மூன்று பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியை நியமித்து, அதில்; பொதுமன்னிப்பு பெற்ற (பாவமன்னிப்பு?) ஞானசாரரை தலைவராக நியமித்துள்ளார். குழுவில் ஒன்பது சிங்கள நபர்களின் பெயர்களும், நான்கு முஸ்லிம் நபர்களின் பெயர்களும் இருக்கின்றன. ஒரு தமிழ் நபரின் பெயரும் இல்லை.

(ஒருவேளை சிங்கள பெயருக்குள் தமிழ் நபர்கள் ஒளிந்து இருக்கிறார்களோ, என்னவோ என்று தேடியும் பார்த்தேன். அடித்து கேட்டும் பார்த்தேன்…. ம்ஹும்…!)
முஸ்லிம் பெயர்கள் இருக்கின்றன என்பதாலேயே முஸ்லிம்களுக்கு நியாயம் வழங்கப்பட போகிறது என்பதல்ல.

உண்மையில் முஸ்லிம்களைதான் இங்கே குறி வைக்கிறார்கள், அதற்கு கூடவே துணைக்கு சில முஸ்லிம்களை வைத்துக்கொள்ளப் போகிறார்கள் என்பதுவே பட்டவர்த்தனம்.

ஞானசாரரை தலைவராகப் போட்டால், உள்ளே என்ன நடக்கும் என புதிதாக வகுப்பெடுக்கத் தேவையில்லையே! பையை திறக்காமலேயே பைக்குள் என்ன இருக்கிறது என விளங்குகிறது!

ஆனால், பெயருக்குக் கூட ஒரு தமிழரை நியமிக்க மறுக்கும் இந்த மனிதரின் வெறுப்பு மனப்பான்மை நமக்கு வெறுப்பூட்டுகிறது.
இதற்கு அரசுக்குள் இருக்கும் செந்தமிழர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் எனக் கேட்க விரும்புகிறேன்.