பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபில் திருத்தங்களைச் செய்ய சிறீலங்கா அரசாங்கம் இணக்கம்!

228 0

888829373courtsசிறீலங்காவில் பங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள சிறீலங்கா அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

புதிதாக கொண்டு வரப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான வரைவு ஆவணம் கடந்த செப்ரெம்பரில் சிறிலங்கா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த வரைவு ஆவணம், வெளியே கசிந்துள்ள நிலையில் அதற்கு பல தரப்பினரிடமிருந்து கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது.

இந்த நிலையிலேயே, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட மூல வரைபில் திருத்தங்களைச் செய்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்த திருத்தங்கள் தொடர்பாக, நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடந்த தேசிய பாதுகாப்புத் தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. இந்தக் கூட்டத்தில் சூடான விவாதங்கள் நடந்ததாக, துறைசார் கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் ஒருவரிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்கு முன்பாக சட்டவாளர் அனுமதியளிக்கவேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் தொடர்பாக இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படாமலேயே கூட்டம் நிறைவடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதும் அவர் சட்டவாளரரைச் சந்திக்க அனுமதிக்கவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜேவிபியும் துறைசார் கண்காணிப்புக் குழுவிடம் வலியுறுத்தியிருந்தன.

இருப்பினும், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் திருத்தங்களுடன் நேற்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே இந்த திருத்த வரைவை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

இந்தத் திருத்தங்களுக்கு அமைச்சரவை அனுமதி அளித்ததன் பிற்பாடு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

அத்துடன், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது கவலையை வெளியிட்டிருந்த நிலையிலும், தற்போது அதில் மாற்றம் செய்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.