தீபாவளி பண்டிகை: சொந்த ஊர் செல்ல அரசு பஸ்களில் 30 ஆயிரம் பேர் முன்பதிவு

161 0

தீபாவளி பண்டிகைக்காக பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல தற்போது 1,100 பஸ்களுக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த இடங்கள் நிரம்பியவுடன் கூடுதலான பஸ்கள் முன்பதிவுக்கு கொண்டு வரப்படும்.

தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களுக்கு சென்று பொதுமக்கள் கொண்டாடும் வகையில் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

வருகிற 4-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் 16,500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 1,100 பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc அலுவலக வெப்சைட் வழியாகவும் முன்பதிவு செய்யப்படுகிறது.

இதுவரையில் 30 ஆயிரம் பேர் சொந்த ஊர் செல்வதற்காக முன்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து விரைவு போக்குவரத்து கழக உயர்அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

நவம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் பல்வேறு நகரங்களில் இருந்து தீபாவளி பயணம் மேற்கொள்ள 30 ஆயிரம் பேர் இன்று காலை நிலவரப்படி முன்பதிவு செய்துள்ளனர். இதில் சென்னையில் இருந்து பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல முன்பதிவு செய்து இருக்கிறார்கள்.

தற்போது 1,100 பஸ்களுக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த இடங்கள் நிரம்பியவுடன் கூடுதலான பஸ்கள் முன்பதிவுக்கு கொண்டு வரப்படும்.

முன்பதிவு

பொதுவாக தீபாவளிக்கு முந்தைய வாரத்தில்தான் முன்பதிவு அதிகரிக்கும். அந்த வகையில் இந்த வாரம் முதல் முன்பதிவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. முன்பதிவு அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதலாக பஸ்களை தேவையான வழித்தடங்களில் இயக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.

அரசின் கொரேனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முன்பதிவு நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.