பாவனா காந்த், அவனி சதுர்வேதி, மோகனா சிங்! இந்த 3 பெண்களுக்கும் இந்திய விமானப் படை வரலாற்றில் நிரந்தர இடமிருக்கும். ஆம், விமானப் படையில் முதன்முதலாய் போர் விமானங்களை இயக்கப் போகும் பெண்கள் இவர்கள். முதல்கட்டப் பயிற்சியையும், 150 மணி நேரப் பறப்பையும் முடித்திருக்கும் இப்பெண்கள் அடுத்து, நவீன ஜெட் போர் விமானங்களில் 6 மாதப் பயிற்சி பெறப் போகின்றனர். அதன் பிறகு இவர்கள் போர் விமான விமானிகளாகப் பொறுப்பேற்பர், இவர்களுக்கு உரிய ‘ஸ்குவாட்ரன்’ (விமானப் படை அணி) ஒதுக்கப்படும். இந்த தைரியலட்சுமிகள், தங்களது பயிற்சிக் காலத்தின் ‘திரில்லிங்’ அனுபவங்களை விவரிக்கின்றனர்.
மோகனாசிங்:‘‘இரவு நேரத்தில் விமானத்தில் பறப்பது எனக்குப் புதிய அனுபவம். ஆனால், அதுதான் இங்கே சுவாரசியமான விஷயமும் கூட. நான் முதன்முதலில் இரவில் ‘டேக் ஆப்’ ஆகி வானில் பறந்தபோது, எனக்கு ஆயிரம் அடிக்குக் கீழே சின்னச் சின்ன மத்தாப்புச் சிதறலாய் விரிந்த வாண வேடிக்கையைப் பார்த்தபோது சிலிர்த்தது. சிறுவயதில் தரையில் நின்று அண்ணாந்து பார்த்த வாண வேடிக்கையை, அதற்கு மேலே இருந்து பார்த்தது அற்புதமான அனுபவம்’’
(ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனுவைச் சேர்ந்த மோகனா, விமானப் படை பாரம்பரியத்துக்குச் சொந்தக்காரர். இவரது தாத்தா, தந்தை இருவருமே விமானப் படை வீரர்கள். கம்பீரமான விமானப் படை சீருடையை அணிவது மோகனாவின் சிறுவயதுக் கனவாக இருந்திருக்கிறது)
‘‘நான் ‘செக்டர் 1’ பகுதியில் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது என் விமானத்துக்கு நெருக்கமாக சில மின்னல்கள் ஏற்பட, ஒரு நொடி நடுங்கி மீண்டேன். தரை இறங்குவதற்காக உயரத்தைக் குறைத்தபோது மேகக் கூட்டங்களை எதிர்கொண்டேன். இரவு வானின் நட்சத்திரப் புள்ளிகளும், கீழே நகர விளக்குகளின் வெளிச்சப் புள்ளிகளும் சேர்ந்து, எது வானம், எது பூமி என்ற குழப்பத்தை எனக்கு ஏற்படுத்தின. எவை நட்சத்திரங் கள், எவை விளக்கு வெளிச்சங்கள் என்று கொஞ்சம் தடுமாறினேன். விமானத்தின் உயரம் குறித்து இன்டிகேட்டர் காட்டும் அளவுக்கும், நான் காணும் காட்சிகளுக்கும் தொடர்பில்லாது இருந்தது. ஆனால் எனது பயிற்சியாளர் என்னிடம் தெளிவாகச் சொல்லியிருந்தது ஞாபகமிருந்தது… ‘காணும் காட்சிகளைக் கண்டு குழம்பாதே, இன்டிகேட்டர்கள் காட்டுவதை நம்பு.’ அக்குரல் திரும்பத் திரும்ப எனக்குள் ஒலிக்க, நான் முழுக்க முழுக்க இன்டிகேட்டர் சொல்வதை நம்பி விமானத்தின் உயரத்தைக் குறைத்தேன். ரன்வேயை கண்டபிறகுதான் நிம்மதி ஏற்பட்டது!’’
அவனி சதுர்வேதி: ‘‘அன்று ஒரே நாளில் இரு முறை பறக்கவேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. இரண்டாவது முறையில் ரன்வேயில் விரைந்து, முதல் தரைக் குறியீட்டை நெருங்கும்போது, எனது தலைக்கு மேல் உள்ள கதவு சரியாக மூடப்படாமல் இருக் கிறது என்பதற்கான ஆடியோ எச்சரிக்கைக் குரலைக் கேட்டேன். ஒரு நொடி நான் தடுமாறினாலும், நான் பெற்றிருந்த பயிற்சி எனக்குக் கைகொடுத்தது. உடனடியாக சுதாரித்துக் கொண்டு விமானத்தின் வேகத்தைக் குறைத்து, நிறுத்தத்துக்குக் கொண்டுவந்தேன். நான் ஒரு நொடிக்கு மேல் தாமதித்திருந்தாலும், திறந்த கதவு வழியாக காற்றுப் புகுந்து பெரிய அபாயம் ஏற்பட்டிருக்கும்!’’
பாவனா காந்த்: ‘‘அன்று நான் வானில் 20 ஆயிரம் அடி உயரத்தில் தனியே பறந்து கொண்டிருந்தேன். நான் வானில் தலைகீழாகச் சுழன்று மீள வேண்டும். அப்போது எனக்குள் லேசான தயக்கம் ஏற்பட்டது. உடனே எனக்குள்ளே நான், ‘இப்போது நான் இந்தப் பயத்தை வெல்லாவிட்டால், எப்போதுமே பயம் போகாது’ என்று சொல்லிக்கொண்டே, விமானத்தை சுழல வைத்தேன். முதலில் கொஞ்சம் ‘பக்… பக்…’ என்றிருந்தாலும், ‘எது நடந்தாலும் உன்னால் மீள முடியும்’ என்று எனக்குள் இருந்த போர் விமானி கூறினாள். அந்த நேரத்தில் நான் ஏற்கனவே பெற்றிருந்த கடும் பயிற்சிதான் எனக்கு உதவியது. சுழற்சியில் இருந்து அழகாக மீண்டது விமானம் மட்டுமல்ல, எனது தன்னம்பிக்கையும் கூடத்தான்’’