பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படுதல், அரசியற் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, இராணுவம் குறைப்பு, காணாமற் போனோர் விவகாரம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கும் இன்னமும் தீர்வு காணப்படாமல் இழுத்தடிப்புத் தொடர்ந்த வண்ணமுள்ளது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தற்போதைய வடமாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் தனது இரண்டாண்டு பதவிப் பூர்த்தி விழாவின் போது ஆற்றிய உரையின் போது குறிப்பிட்டிருந்தமை குறித்து வினவிய போதே இவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,தற்போதைய ஜனாதிபதி தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி இன்று காற்றில் பறக்க விடப்பட்டிருக்கின்றது.தமிழ் மக்கள் அவர் மீது நம்பிக்கை கொண்டு அளித்த வாக்குகள் இன்று வீணடிக்கப்பட்டுள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது.
இன்னும் சில மாதங்களில் நல்லாட்சி அரசின் வேஷம் முழுமையாகக் களையக்கூடிய வாய்ப்பிருக்கின்றது நாட்டு மக்கள் எதிர்பார்த்தபடி இன நல்லிணக்கம், சுதந்திரம், மனிதவுரிமை, ஊடக சுதந்திரம் அனைத்தையும் நாம் பலப்படுத்தியுள்ளோம்.ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் உட்பட சகல சர்வதேச தலைவர்களும் எமது நாட்டின் மாற்றம் தொடர்பில் பெருமையாகப் பேசிக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தேர்தல் வாக்குறுதியில் தான் தெரிவித்துள்ள இன நல்லிணக்கம் போன்ற விடயங்கள் பலப்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.
ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்தவரை முன்னரிருந்த காட்டாட்சி அல்லது பேயாட்சியின் வேகம் ஓரளவு குறைந்திருக்கின்றதே தவிர எந்தவிதமான பாரிய முன்னேற்றங்களும் ஏற்படவில்லை என்ற அதிருப்தியிலேயே எங்களுடைய மக்கள் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட விசாரணைக்கான தீர்மானத்திற்கமைய ஆரம்பக் கட்ட விசாரணைகள் நடைபெற்றதன் பின்னர் சர்வதேச விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என்ற எங்கள் கோரிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்திருந்தது.
அதேபோன்று ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளரும் இதற்கு ஆதரவு வழங்கிய நிலையில் இலங்கை அதற்கு இணை அனுசரணை வழங்கித் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. அதிலே, பொதுநலவாய நாட்டு நீதிபதிகள் இடம்பெறுவார்கள்.
அத்துடன் விசாரணையாளர்கள், வழக்குத் தொடுநர்கள் இடம்பெறுவார்கள் என கூறப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வெளிநாட்டு நீதிபதிகள் எவரும் இடம்பெறமாட்டார்கள் என ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாட்டுத் தலைவர்கள் இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் தொடர்பில் பெருமைப்பட்டிருப்பதாக ஜனாதிபதி தனது உரையில் கூறியிருந்தாலும் கூட அவர்கள் இந்த முன்னேற்றத்தை ஒரு ஆரம்பமாகத் தான் கருதுகிறார்கள்.
அரசியல் தீர்வு உட்பட அனைத்து விடயங்களிலும் தொடர்ச்சியாகத் தமிழ் மக்களை அரசாங்கம் ஏமாற்றுமானால் சர்வதேச அழுத்தம் இலங்கை மீது பாயும்.
இலங்கை அரசாங்கம் தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததுடன் இலங்கைக்குள் அரசியல் தீர்வை எட்டத் தவறினால் ஐக்கியநாடுகள் சபையின் மேற்பார்வையில் சர்வதேசத்தின் மத்தியஸ்த்துடன் தீர்வு காணும் ஒரு சூழலுக்கு இட்டுச் செல்லும்.
ஆகவே, சர்வதேசத் தலைவர்கள் எங்கள் பக்கம் என உண்மைக்குப் புறம்பான விடயங்களைக் கூறுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.எமது மக்கள் கடந்த கால ஆயுதப் போராட்டத்தினால் மிகவும் துன்பத்தையும், வேதனைகளையும் சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் ஐக்கிய இலங்கைக்குள் எமக்கான அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ விரும்புகிறோம்.
இதற்கு மாறாக எங்களை அரசாங்கம் மீண்டும் அடக்கியாள நினைத்தால் எதிர்காலத்தில் பாரிய விளைவுகள் ஏற்படும்.மேலும், இந்த நிலைமை தொடர்ந்தால் மீண்டுமொரு ஆயுதப் போராட்டம் ஆரம்பமாகாது என்பதற்கு நாங்கள் உத்தரவாதம் வழங்க முடியாது என்பதையும் ஜனாதிபதிக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தற்போதைய வடமாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.