இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சுப் பதவி வழங்கினால் கடுமையான தீர்மானம் எடுக்க நேரிடும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…
அமைச்சுப் பதவியொன்றை அரசாங்கம் தொண்டமானுக்கு வழங்கினால், அது குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிறைவேற்றுச் சபை கடுமையான தீர்மானம் ஒன்றை எடுக்கும்.
அரசியல் அமைப்பிற்கு அமைய உச்ச அளவில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலதிகமாக அமைச்சர்களை நியமிக்க வேண்டுமாயின் அதற்கு நாடாளுமன்றின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
இவ்வாறான ஓர் விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் யோசனை முன்வைக்கப்பட்டால் அதற்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பது எமக்கு தெரியும்.ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளும் தார்மீக உரிமை தொண்டமானுக்கு கிடையாது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தோற்கடிப்பதற்கு தொண்டமான் அனைத்து சக்தியையும் பயன்படுத்தியிருந்தார்.நான் மட்டுமே பதுளையில் ஜனாதிபதியின் வெற்றிக்காக சுவரொட்டிகளை ஒட்டினேன் என அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.