கோவையை சேர்ந்த கிரண் பட் என்பவர் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். திரையுலகின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருது வழங்கும் விழா வரும் பிப்ரவரி 11ம் தேதி நடக்கிறது. இதில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் விருதுகளை தி அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சைன்ஸ் அறிவித்துள்ளது. இதில், 18 பேருக்கு விருது வழங்கப்படவுள்ளது.
இந்த விருதுக்கு கோவை சாய்பாபாகாலனியை சேர்ந்த கிரண் பட்(41) என்ற இந்தியர் ஒருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவரின் மனைவி பாயல் பட். இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இதுகுறித்து கிரண் பட் தந்தை சீனிவாஸ் பட் கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: என் மகன் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர், பிளஸ்2 வரை படித்தது கோவையில்தான். பின்னர், கல்லூரி படிப்பை வெளிநாட்டில் முடித்து 2004ல் ஹாலிவுட் படஉலகில் நுழைந்தார். ஹாலிவுட் படங்களான அவெஞ்சர்ஸ், பைரட்ஸ் ஆப் கரிபீயன், வார்க்ராப்ட், ஸ்டார் வார்ஸ் எபிசோட் 7, ஸ்டார் வார்ஸ் ராக் ஒன் உள்ளிட்ட படங்களில் கதாபாத்திரங்களின் முக பாவனைகளை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்றும் பணியை மேற்கொண்டார். இதற்காக இந்த வருடம் ஆஸ்கார் விருது வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்” என்றார்.
அமெரிக்காவில் இருந்து ஸ்கைப் மூலம் பேசிய கிரண் பட் கூறியதாவது” ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே, இரண்டு முறை நான் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டேன். ஆனால், கிடைக்கவில்லை. இந்த முறை தேர்வு செய்யப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.