ஜெயலலிதா தொடர்ந்து எதிர்த்து வந்த உதய் திட்டத்தில் தமிழகம்

379 0

மத்திய அரசின் ‘உதய்’ மின் திட்டத்தில் சேருவதற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்நிலையில், தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு எந்த நிபந்தனையும் இல்லாமல் உதய் மின் திட்டத்தில் இணைந்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி முன்னிலையில்  அதிகாரிகள் டெல்லி சென்று கையெழுத்திட்டனர். நாடு முழுவதும் உதய் (யுடிஏஒய்) மின்திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இந்த திட்டத்தை ஆரம்பத்திலிருந்தே ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார். இந்தியாவில் உள்ள 20 மாநிலங்கள் மட்டுமே இந்த திட்டத்தில் சேர ஆர்வம் தெரிவித்தன. இத்திட்டத்தின்படி, 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்.

நலிவடைந்த மின்வாரியங்களை சீரமைப்பது, மின் வினியோகத்திலும் தனியாருக்கு அனுமதி, பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிப்பது போன்று மூன்று மாதத்துக்கு ஒருமுறை மின் கட்டணத்தை மாற்றி அமைப்பது, மீட்டர் பொருத்தாத மின் இணைப்புகளே இருக்க கூடாது, இலவச மின்சாரத்துக்கும் மீட்டர் பொருத்த வேண்டும், ஒருங்கிணைந்த மேம்பாட்டு திட்டம் மூலம் மின் கம்பங்கள், பூமிக்கு அடியில் பதிக்கும் கேபிள்கள், டிரான்ஸ்பார்மர் பவரை அதிகப்படுத்துவது உள்ளிட்டவை மேம்படுத்தப்படும்.  அதேபோன்று மின் வினியோகமும் கம்ப்யூட்டர் மூலம் நவீனப்படுத்தப்படும். மின் இழப்பு குறைக்கவும், மின் திருட்டை கண்டுபிடிக்க சிறப்பு திட்டம் என ஏராளமான அம்சங்கள் உள்ளதாக கூறப்பட்டது.

மேலும் நிதி சீரமைப்பு திட்டம் என்ற பெயரில், மின்வாரிய கடன்களை மாநில அரசு 75 சதவீதம் ஏற்றுக் கொள்ள வேண்டும். மீதமுள்ள 25 சதவீதமும் பாண்டுகளாக மாற்றப்பட்டு, வங்கிகளுக்கு மாநில அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற உத்தரவாதத்துடன் இந்த திட்டம் செயலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் உதய் மின் திட்டத்தை ஏற்றுக்கொள்வதாக கூறி, குஜராத், மகாராஷ்டிரா, காஷ்மீர், ராஜஸ்தான், கோவா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்பட 20 மாநிலங்கள் இதுவரை இணைந்துள்ளன.   அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இதில் இணைய மறுத்தார். ‘‘இந்த திட்டம் அமலுக்கு வந்தால், கூட்டாட்சி தத்துவம் பாதிக்கப்படும். மேலும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணத்தை மாற்றி அமைத்தால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். முழுக்க முழுக்க தனியார் வசம் மின்வாரியம் செல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது’’ என்று கூறி இதில் இணைய மறுத்தார்.

இந்நிலையில், ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வரானார். அவர் முதல்வரானதில் இருந்து ஜெயலலிதா எதிர்த்து வந்த திட்டங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதற்கு மத்தியில் உள்ள மோடி அரசின் நெருக்கடியும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. தமிழக மக்கள் நலன் கருதி, சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளதால் உதய் மின் திட்டத்தில் இணைய ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அரசு இணையும் என்று சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. இதனால், மின்வாரிய ஊழியர்களும், சாதாரண மக்களும் அதிர்ச்சியடைந்தனர். தற்போது அது உண்மையானது. டெல்லியில் நேற்று மாலை 3 மணிக்கு அசோகா ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதய் மின் திட்டத்தில் தமிழக அரசு இணைந்தது. மத்திய மின்சாரத்துறை அமைச்சர் பியூஸ் கோயல், தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி முன்னிலையில், தமிழக மின்வாரிய தலைவர் சாய்குமார், எரிசக்தி துறை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

ஜெயலலிதா எதிர்த்து வந்த ஒரு திட்டத்தை, அவர் மறைந்த பிறகு அவரது அமைச்சரவையில் இடம் பெற்ற மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, அந்த திட்டத்தில் இணைய டெல்லிக்கே சென்று கையெழுத்திட்டுள்ளார். சிக்கலான விஷயத்தை எளிதில் புரிந்து கொள்ளும் அம்மா: நிகழ்ச்சியில்  மத்திய மின்சார துறை அமைச்சர் பியூஷ் கோயல், மறைந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவுடனான சந்திப்பை நினைவு கூர்ந்தார்.  இதுபற்றி அவர் கூறுகையில்,  “ஒரு விஷயத்தை புரிந்துகொள்வதற்கு நிபுணர்கள் நீண்ட நேரம்  எடுத்துக்கொள்வார்கள். ஆனால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அம்மாவுடன் நடந்த 40  நிமிட பேச்சு மறக்க முடியாதது. அம்மா இந்த திட்டத்தில் முழுஆர்வத்துடன்  காணப்பட்டார். மேலும் இந்த திட்டம் தமிழக மக்களுக்கு எந்த அளவிற்கு  பயன்தரும் என்பதையும் அவர் உடனடியாக புரிந்துகொண்டார். சிக்கலான  விஷயங்களையும் எளிதில் புரிந்துகொள்ளும் ஆற்றல் வாய்ந்தவர் அவர்” என்றார்.

மின் கட்டணம் அடிக்கடி உயரும்: தமிழக மின்வாரியத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரிடையாகவும், 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மறைமுகமாகவும் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் 85 ஆயிரம் பேர் மின்வாரியத்தில் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். உதய் திட்டம் அமலுக்கு வந்தால், அனைத்தும் தனியார் வசம் செல்லும் வாய்ப்புகள் அதிகம். எனவே, ெதாடர்ந்து இவர்களுக்கு பணி வழங்கப்படுமா, ஓய்வூதியர்களின் கதி என்ன என ஏராளமான கேள்விகளுக்கு இதுவரை மத்திய அரசு எந்த உறுதியும் அளிக்கவில்லை. அது மட்டும் அல்லாமல், பெட்ரோல், டீசல் விலை தற்போது மாதத்திற்கு இரண்டு முறை உயர்வது போன்று, மின் கட்டணமும் வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை உயர வாய்ப்புள்ளது. மின் கட்டணம் 3 மாதத்திற்கு ஒருமுறை உயர்த்தக்கூடாது என்ற நிபந்தனையின் பேரிலேயே தமிழக அரசு உதய் திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

* உதய் மின்திட்டம் 2015 நவம்பரில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் இணைந்த மாநிலம் ஜார்க்கண்ட். தமிழகம் 21வது மாநிலமாக இணைந்துள்ளது.
* ஜெயலலிதா இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்தார். 2016 ஜூலை15ல் சென்னை வந்த மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் திட்டம் தொடர்பாக ஜெயலலிதாவிடம் 40 நிமிடம் விளக்கினார்.
* மின்சார வாரிய கடனில் 75% தமிழக அரசு ஏற்க வேண்டும். மீதமுள்ள 25% கடனை சமாளிக்க கடன் பத்திரங்களை வெளியிட வேண்டும்.
* மின்சார வாரியத்திற்கு தற்போது 81,782 கோடி கடன் உள்ளது. உதய் திட்டத்தில் இணைந்ததால் 65,320 கோடி கடனை தமிழக அரசு ஏற்கும். மீதமுள்ள 16,462 கோடிக்கு கடன் பத்திரங்களை வெளியிட வேண்டும்.