பொங்கல் திருநாளை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியிருப்பதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. பொங்கல் விடுமுறையை பொது விடுமுறை பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாட விரும்புபவர்கள் விருப்பத்தின் பேரில் விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. மதச் சார்பற்ற தன்மையை கேள்விக்குறியாக்கும் நடவடிக்கையின் உச்சக்கட்ட வெளிப்பாடு என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நடவடிக்கை தமிழகத்துக்கு துரோகம் இழைக்கும் செயல் என்று அவர் கூறியுள்ளார். மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் சென்னையில் 11ம் தேதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. மத்திய அரசின் அறிவிப்புக்கு பல்வேறு தலைவர்களும், மத்திய அரசு ஊழியர் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தை முதல் நாளை கட்டாய விடுமுறை நாட்கள் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியிருப்பது தமிழக நாகரிகத்தின் மீதும், பண்பாட்டின் மீதும் தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் நடவடிக்கை தமிழகத்தை வஞ்சிக்கும் செயல் என்று த.ம.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் சில பகுதிகளில் மட்டும் கொண்டாடப்படும் புத்த பவுர்ணமி, குருநானக் பிறந்தநாள், மகாவீர் ஜெயந்தி ஆகியவை கட்டாய தேசிய விடுமுறை நாட்களில் இடம்பெற்றுள்ள நிலையில் பொங்கல் திருநாளையும் அந்த பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகர்கள் இனரீதியாக எழுச்சி பெற்றுவிடக் கூடாது என்ற மனோவாத சிந்தனையின் வெளிப்பாடு தான் இந்த தான்தோன்றி தனமான முடிவு என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். அதேபோல தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோரும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.