சிரியாவில் அரசுப் படைகளால் மூடப்பட்ட அலெப்போ நகர சாலையை மீட்கும் முயற்சியில் 29 போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டை சேர்ந்த புரட்சிப் படைகள் அமெரிக்காவின் ஆதரவுடன் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. பஷர் அல் ஆசாத்தின் ஆட்சியை காப்பாற்ற ரஷியா ஆதரவு தெரிவித்து வருகிறது.
இந்தப் போராளிகளுக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் உணவுப் பொருட்களை வாகனங்கள் மூலம் கொண்டுவரும் அலெப்போ நகரின் பிரதான சாலையை சமீபத்தில் ராணுவம் அடைத்து வைத்தது. அந்த சாலையை மீட்பதற்காக போராளிகள் நேற்று அரசுப் படைகளுடன் தாக்குதலில் ஈடுபட்டனர்.
அரசுப் படைகள் நடத்திய எதிர்தாக்குதலில் பய்லாக் அல் ஷ்யாம் மற்றும் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் ஆதரவு பெற்ற அல் நுஸ்ரா இயக்கங்களை சேர்ந்த 29 போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.