வவுனியா கோவில்குஞ்சிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யுமாறுகோரி, அப் பாடசாலையின் மாணவர்கள் மற்றும் பெற்றோருடன் கிராமத்தவர்களும் இணைந்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்குஞ்சிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் நிர்வாகத்திறனற்ற அதிபரை மாற்றவேண்டும், குறித்த பாடசாலைக்கு போதியளவு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், பௌதீக வளங்கள் பாடசாலைக்கு வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, பாடசாலை வாயிலை மறித்து இன்று காலை குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கோவில்குஞ்சிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 56 மாணவர்கள் கல்வி கற்று வந்த நிலையில், அம் மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஒழுங்காக இடம்பெறாமையினால், பெற்றோர்கள் வேறு பாடசாலைகளுக்கு தமது பிள்ளைகளை மாற்றி வருவதாகவும், இதன் காரணமாக பாடசாலை மூடப்படும்
அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.தற்போது குறித்த பாடசாலையில் 33 மாணவர்களே கல்வி கற்று வருவதாகவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதன்போது குறிப்பிட்டனர்.
இந்நிலையில் குறித்த பாடசாலையிலிருந்த ஆசிரியர்களில் நான்கு பேர் மகப்பேற்று விடுமுறையிலும், மற்றைய ஆசிரியர் இடமாற்றம் பெற்றும் சென்றுள்ள நிலையில், அதிபரும், ஒரு ஆசிரியருமே 9ஆம் ஆண்டு வரை உள்ள இப்பாடசாலையில் கற்பித்து வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சுட்டிக்காட்டினர்.
இதேவேளை, ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்ட இடத்திற்கு வருகை தந்த வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் வலய கல்வி உதவிப் பணிப்பாளர் திருமதி மாலதி முகுந்தன், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களின் கோரிக்கைகளை செவிமடுத்ததுடன், இம்மாத இறுதிகள் பாடசாலையின் அதிபரை இடமாற்றம் செய்வதுடன், மகப்பேற்று விடுமுறையில் உள்ள ஆசிரியர்களுக்கான பதிலீட்டு ஆசிரியர்களை உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி நியமிக்க ஆவன செய்வதாகவும் உறுதியளித்தார்.
இதனையடுத்து ஆர்ப்பாட்டம் காலை 11 மணியளவில் கைவிடப்பட்டது.