அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான மூன்று உடன்படிக்கைகளையும் சபையில் சமர்ப்பிப்பதாக பிரதமர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
2017ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று இடம்பெறுகிறது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை நாடாளுமன்றம் கூடியது. இதன்போது உரையாற்றுகையிலேயே பிரதமர் ரணில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையின் மூன்று துறைமுகங்களையும் அபிவிருத்தி செய்வதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.ஹம்பாந்தோட்டை பிரதேசத்தை அபிவிருத்தி செய்யவென 500 கோடி அமெரிக்க டொலர் முதலீடு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை நிறுவனம் ஒன்று சீமெந்து தொழிற்சாலை ஒன்றை ஆரம்பிக்க முன்வந்துள்ளது. ஏனையவற்றிற்கு சீன முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளனர்.எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், மின்சார நிலையம், கப்பல் கூட்டுத் தளம் சீமெந்து தொழிற்சாலை ஆகியவற்றை நிர்மாணிக்க சீன முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளனர்.
அமெரிக்க மற்றும் அரேபிய நிறுவனங்கள் மேலும் சில எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை ஆரம்பிப்பதற்காக இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.பெற்றுக் கொள்ளப்படும் காணிகளில் 90 சதவீதமானவை அரசாங்கத்திற்கு சொந்தமானவையாகும். அவற்றில் புராதன சின்னங்கள் எதுவும் கிடையாது.இது தொடர்பாக தாம் அண்மையில் பிரதேசத்தின் மஹா சங்கத்தினருக்கு தெளிவுபடுத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.