இரு போராட்டங்களுக்கும் அனைவரும் ஆதரவு தர வேண்டும்! – சுமந்திரன்

190 0

வடக்கு, கிழக்கில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் ஆகியோர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி நாளையும் மறுதினமும் நடைபெறவுள்ள இரண்டு கவனயீர்ப்புப் போராட்டங்களுக்கும் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இழுவைப் படகு தடைச் சட்டத்தை முறையாக அமுல்படுத்துமாறு கடற்தொழில் நீரியல்துறை அமைச்சரைக் கோரி நாளை ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவிலிருந்து பருத்தித்துறை வரை கடல் வழியாக நடைபெறவுள்ள எதிர்ப்புப் பேரணிக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு நல்க வேண்டும்,

இதேவேளை, நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள உரம் மற்றும் கிருமிநாசினி பற்றாக்குறை விவசாயிகளையும் தோட்டத்தொழிலையும் மிக மோசமாகப் பாதித்திருக்கின்றது. வடக்கிலும் கிழக்கிலும் பெரும்போக நெற் பயிர்ச்செய்கை தற்போது ஆரம்பமாகியுள்ளது. ஓரிரு வாரங்களுக்குள் பசளை மற்றும் கிருமி நாசினி அத்தியாவசியமாக தேவைப்படும். இந்தத் தேவையை உடனடியாகப் பூர்த்தி செய்யுமாறு கோரி வடக்கு, கிழக்கிலுள்ள சகல கமநல சேவைகள் மையங்களுக்கூடாக எதிர்வரும் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன.

கொரோனாத் தொற்று காரணமாக சிறிய எண்ணிக்கையானவர்கள், சமூக இடைவெளிகளைப் பேணி இப்போராட்டத்தில் ஈடுபடுவார்கள். பல இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெறவிருக்கும் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் – என்றார்