பொருளாதார நெருக்கடிக்கு இதுதான் காரணம் ; சீ.வை.பி. ராம்

233 0

அரசாங்கத்திடம் முறையான பொருளாதார முகாமைத்துவம் இல்லை. அதன் விளைவாகவே ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்த முடியாமல் போயிருக்கின்றது.

இந்நிலைமையை கட்டுப்படுத்திக்கொள்ள அரசாங்கம் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொருளாதார ஆலோசகரும் ஐக்கிய மக்கள் சக்தி வடகொழும்பு பிரதான அமைப்பாளருமான சீ,வை.பி. ராம் தெரிவித்தார்.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பாகவும் அதில் இருந்து மீள்வதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கை தொடர்பாகவும் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து வகையான பொருட்களின் விலையும்  பாரியளவில் அதிகரித்துள்ளது.

அதனால் மக்கள் அன்றாட வாழ்க்கையை கொண்டுசெல்ல முடியாமல் பல அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

கூலி வேலை செய்து குடும்பத்தை கொண்டுசெல்லும் சாதாரண மக்களுக்கு மூன்று வேளை முறையாக சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.இவ்வாறு கஷ்டப்படும் மக்களுக்கு அரசாங்கத்திடம் எந்த நிவாரணமும் இல்லை.

அத்துடன் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. முறையான பொருளாதார முகாமைத்துவம் இல்லாததாலே இந்த நிலைக்கு காரணம்.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பணம் அச்சிட்டதே தவிர பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கவில்லை. பாரியளவில் பணம் அச்சிட்டதால் நாட்டில் பணவீக்கம் அதிகரித்திருக்கின்றது.

பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.டொலரின் பெருமதி அதிகரித்து, ரூபாவின் பெருமதி வீழ்ச்சியடைந்துள்ளதால் இறக்குமதி செய்யும் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

மேலும் விலை கட்டுப்பாடு விதித்து வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவிப்புகள் அனைத்தையும் அரசாங்கம் நீக்கிக்கொண்டுள்ளது.

இறக்குமதியாளர்களும் வியாபாரிகளுமே பொருட்களுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டுள்ளனர்.அதனால்  சந்தையில்  எந்தவொரு பொருளுக்கும் கட்டுப்பாடு இல்லை.

வியாபாரிகள் தாங்கள் நினைக்கும் விலைக்கு பொருட்களை விற்பனை செய்கின்றனர். சிறுவர்களுக்கான பிஸ்கட், டொப்பி போன்ற இனிப்பு பண்டங்கள் மற்றும் சவர்க்காரம் போன்ற சிறிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருகின்றது.

விலை கட்டுப்பாடு இல்லாமையே இதற்கு காரணமாகும். விலை கட்டுப்பாடு இல்லாத நாடு இல்லை.

அரசாங்கத்துக்கு பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்ய முடியாமலேயே விலை கட்டுப்பாட்டை நீக்கி இருக்கின்றது.

இந்த நிலை தொடர்ந்தால் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப நீண்ட காலம் செல்லும். அதனால் அரசாங்கம் உடனடியாக பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்து ஏற்றுமதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்து சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கவேண்டும். வெளிநாட்டு முதலீட்டாளர்களை நாட்டுக்கு வரவழைத்துக்கொள்ள தேவையான ஊக்குவிப்புகளை மேற்கொள்ளவேண்டும்.

அதற்காக இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, நாட்டின் மீது நம்பிக்கையை சர்வதேசத்துக்கு ஏற்படுத்தவேண்டும் என்றார்.