தேர்வு பயத்தால் தீக்குளித்த மாணவி கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 28 நாட்களுக்கு பிறகு உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கத்தை அடுத்த ஐயஞ்சேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கமல்தாஸ் (41).
இவர் சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்சிசி மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி ஷீபா. இவர் கூடுவாஞ்சேரியை அடுத்த மாடம்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இவர்களது ஒரே மகள் அனு (வயது17). இவர் சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார்.
மாணவி அனு சிறு வயதில் இருந்தே டாக்டராக வேண்டும் என்று விரும்பினார். இதையடுத்து கடந்த மாதம் 12-ந்தேதி நீட் தேர்வு எழுதினார். தேர்வுக்கு பிறகு தனது பெற்றோரிடம் தேர்வு சரியாக எழுதவில்லை என்று கூறி வந்தார்.
தேர்வில் தேர்ச்சி பெறுவேனா என்பது தெரியவில்லை என்றும் அவர்களிடம் கூறினார்.
கடந்த மாதம் 16-ந்தேதி அனுவின் பெற்றோர் பள்ளிக்கு சென்று விட்டனர். அனு மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது நீட் தேர்வு தோல்வி பயம் காரணமாக அனு தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் தீயை அணைத்து உடனடியாக செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மாணவி அனு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் 28 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.