கடந்த 3 நாட்களில் பொது இடங்களில் குப்பை கொட்டிய 507 பேரிடம் இருந்து ரூ.3 லட்சத்து 19 ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை தூய்மையாக பராமரிக்கும் வகையில் பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளை தூக்கி எறிபவர்கள், கட்டுமான கழிவுகளை பொது இடங்களிலும், சாலைகளிலும் கொட்டுபவர்களின் மீதும், நீர்நிலைகள் மற்றும் நீர்வழித்தடங்களில் குப்பைகளை எறிபவர்கள் மீதும் மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை துணை விதிகளின்படி அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த 11-ந் தேதி முதல் 13-ந் தேதி வரையிலான 3 நாட்களில் பொது இடங்களில் குப்பை கொட்டிய 507 பேரிடம் இருந்து ரூ.3 லட்சத்து 19 ஆயிரத்து 200 அபராதமும், பொது இடங்களில் கட்டுமான கழிவுகளை கொட்டிய 123 பேரிடம் இருந்து ரூ.3 லட்சத்து 24 ஆயிரத்து 300 அபராதமும் என மொத்தம் ரூ. 6 லட்சத்து 43 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.