வவுனியா, செட்டிகுளம், அருவித்தோட்டம் சிவானந்த வித்தியாலய மாணவர்களின் பெற்றோர் இன்று பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.
குறித்த பாடசாலையில் 538இற்க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்ற போதும் 15 ஆசிரியர்கள் மாத்திரமே கற்பிக்கின்றனர் என்றும், பின் தங்கிய குறித்த பாசாலையில் தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பல பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதால் மாணவர்கள் கல்வியை தொடர முடியாத நிலை காணப்படுகின்றது என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் சுட்டிக்காட்டினர்.
குறித்த பாடசாலையில் இடப்பற்றாக்குறை, தளபாடப் பற்றாக்குறை என்பன காரணமாக, மரநிழல்களிலும், நிலத்திலும் இருந்தே மாணவர்கள் கல்வி கற்கின்றனர் என்றும், எனவே, மாகாண, மத்திய அரசாங்கங்கள் இவ்விடயத்தில் தலையிட்டு மாணவர்களின் கல்விக்கு உதவ வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்தெரிவித்தனர்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘வேண்டும் வேண்டும் ஆசிரியர் வேண்டும், கிராமப் புறப் பாடசாலைகளை புறக்கணிக்காதே, கல்வி அமைச்சரே எமது பிள்கைளின் எதிர்காலத்தை பாழாக்காதே, நல்லாட்சி அரசே எமது பிள்கைளை படிக்கவிடு’ என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களும் எழுப்பினர்.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தாவிடின் தாம் எதிர்வரும் நாட்களில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப் பேவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களால் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண முதலமைச்சர், வடமாகாண கல்வி அமைச்சர், கல்வி இராஜாங்க அமைச்சர், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் உள்ளிட்ட பலருக்கும் மஜர்களும் அனுப்பி வைக்கப்பட்டன.