யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பலாலி அன்ரனிபுரம் கிராமத்தில் 135 வீடுகள் அமைக்கப்பட்டு, இடம்பெயர்ந்த அப்பகுதி மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 1990ஆம் இடம்பெயர்ந்து முகாம் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கியிருந்த மக்களுக்கான வீடுகள் அமைக்கப்பட்டு, குறித்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.
2015 டிசம்பர் மாதம் பலாலி வடக்கு அன்ரனிபுரம் பகுதி விடுவிக்கப்பட்டு கடந்த வருடம் யூன் மாதம் 135 வீடுகளுக்கான அத்திவாரம் இடப்பட்டு கிராம அபிவிருத்தி திட்டமாக வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
கிராம அபிவிருத்தி திட்;டத்திற்குரிய பத்து உள்ளக வீதிகள் புனரமைக்கப்பட்டு, பொதுக்கிணறுகள் அமைக்கப்பட்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளன.
அமைக்கப்பட்ட 135 வீடுகளும் 8 இலட்சம் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்டு மக்கள் மீள்குடியேற ஆரம்பித்துள்ளனர்.
இடம்பெயர்ந்து வெவ்வேறு இடங்களில் வசித்து வந்த மக்களின் பிள்ளைகள் 114 பேருக்கு 2 பரப்பு வீதம் காணிகள் வழங்கப்பட்டு வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
உள்ளக வீதிகள் தார் போடப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன. நீர்த் தேவையைப்பூர்த்தி செய்வதற்கு பத்து பொதுக்கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது வீடுகளுக்கு குளாய் நீர் வசதிகள் வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மீள்குடியேறிய மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் மின்சார வசதிகள் கிராமத்திற்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.
அமைக்கப்பட்டுள்ள வீடுகளுக்குரிய மின்வழங்கல் சேவை நடைபெற்று வருகின்றன.
பலாலி வடக்கு அன்ரனிபுரத்தில் வசிக்கின்ற மக்கள் கடற்றொழிலாளர்கள் என்ற அடிப்படையில் தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கில் யு.என். நிறுவனத்தின் உதவியுடன் அன்ரனிபுரம் கடற்பகுதியில் வான்தோண்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும்நிலையில், காற்று அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் வான்தோண்டும் நடவடிக்கைகள் தாமதப்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, அப்பகுதியிலிலுள்ள பலாலி வடக்கு அமெரிக்க மிசன் பாடசாலை விடுவிக்கப்படாத காரணத்தினால், மாணவர்கள் நீண்ட தூரம் கல்வி நடவடிக்கைக்கு செல்ல வேண்டியிருப்பதாக பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.