அ.தி.மு.க. கவுன்சிலர் கொலை: கூலிப்படை கும்பலை பிடிக்க வேட்டை

415 0

201607101209177609_ADMK-Counsilor-murder-in-manali-police-investigation_SECVPFசென்னையில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களை கட்டுப்படுத்தவும், குற்றச்செயல்களை குறைக்கவும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.இருப்பினும் அவ்வப்போது அது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் ஞானசேகர் மணலியில் வெட்டிக்கொலை செயயப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.இந்த கொலையில் கூலிப்படையினருக்கு தொடர்பு இருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னையை அடுத்த மணலி ராஜா கார்டன் பகுதியில் வசித்து வந்தவர் ஞானசேகர் (58). அ.தி.மு.க. பிரமுகரான இவர் அப்பகுதியில் மிகவும் பிரபலமானவராக திகழ்ந்தார். முல்லை ஞானசேகர் என இவரை அழைப்பார்கள்.

சென்னை மாநகராட்சி 21-வது வார்டு கவுன்சிலரான இவர், மாநகராட்சி வரி விதிப்பு மற்றும் நிலைக்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தார். திருவொற்றியூர் பகுதி அ.தி.மு.க. அவைத் தலைவராகவும் இருந்தார்.

மணலி பஸ் நிலையம் எதிரில் உள்ள மாதாஜி அடகு கடை ஞானசேகரின் நண்பர் சுந்தாராம் என்பவருக்கு சொந்தமானதாகும். இந்த கடையில் மாலை நேரங்களில் ஞானசேகர் அமர்ந்து இருப்பார். சுந்தாராமுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருப்பார்.

நேற்று மாலை 5 மணி அளவில் வழக்கம் போல ஞானசேகர் அடகு கடைக்கு சென்றார். அப்போது எதிரில் தயாராக காத்திருந்த 3 பேர் கொண்ட கும்பல் திடீரென அடகு கடைக்குள் புகுந்து, ஞானசேகரை சரமாரியாக வெட்டியது. இதில், அவரது தலை, கழுத்து, முகம் உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. ஞானசேகர் ரத்த வெள்ளத்தில் அடகு கடைக்குள்ளேயே சுருண்டு விழுந்தார்.

இதனை நேரில் பார்த்த அடகு கடை உரிமையாளர் சுந்தாராம் அலறி கூச்சல் போட்டார்.பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் தப்பிச் சென்றனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஞானசேகரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் எண்ணூர் உதவி கமி‌ஷனர் செல்வராஜ் மற்றும் மணலி போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஞானசேகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி முழுவதும் காட்டுத் தீயாக பரவியது.இதனால் மணலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பதட்டமான சூழல் நிலவியது. அங்கு கடைகளும் அடைக்கப்பட்டன.

ஞானசேகர் வெட்டிக்கொல்லப்பட்ட அடகு கடை முன்பு அப்பகுதி பொதுமக்களும், அ.தி.மு.க.வினரும், ஏராளமானோர் திரண்டனர். அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்க விடக்கூடாது என்பதில் போலீசார் தீவிரமாக செயல்பட்டனர். பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.

கொலை நடந்த இடம் எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும். மக்கள் நடமாட்டமும் அதிக அளவில் இருக்கும்.ஆனால் கொலையாளிகள் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் மிகவும் துணிச்சலாக அடகு கடைக்குள் புகுந்து ஞானசேகரை வெட்டிக் கொன்றுள்ளனர்.

பின்னர் ரத்தக்கறை படிந்த அரிவாளுடன் தெருவில் சர்வசாதாரணமாக நடந்து சென்றே மோட்டார்சைக்கிளில் ஏறி தப்பி இருக்கிறார்கள்.கொலை செய்வதை தொழிலாக கொண்ட கூலிப்படையினரால் மட்டுமே இப்படி பயமின்றி, கொலை சம்பவத்தில் ஈடுபட முடியும். எனவே ஞானசேகரை கொடூரமாக வெட்டிக்கொன்றது கூலிப்படையினர்தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

கொலை நடந்த அடகு கடையில் கண்காணிப்பு கேமரா உள்ளது. அது தெரியாமலேயே கொலையாளிகள் ஞானசேகரை வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். கேமராவை போலீசார் போட்டு பார்த்தனர். அதில் கொலையாளிகளின் உருவம் பதிவாகி உள்ளது.

இதனை வைத்து துப்பு துலக்கி வருகிறார்கள். பழைய குற்றவாளிகளின் போட்டோக்களுடன் கொலையாளிகளின் போட்டோக்களை ஒப்பிட்டு பார்த்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கொலையாளிகள் யார்? என்பதை கண்டுபிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் பழைய கூலிப்படையினர் மற்றும் ரவுடிகள் பட்டியலை வைத்துக் கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலையாளிகளை பிடிப்பதற்காக நேற்று மாலையில் இருந்து இரவு முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. ஆனால் கொலையாளிகள் போலீசில் சிக்காமல் தப்பிச் சென்று விட்டனர்.இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, கொலையாளிகள் அடையாளம் தெரிந்துள்ளது. இன்று மாலைக்குள் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றார்.

ஞானசேகரின் உடல் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.இக்கொலை சம்பவம் காரணமாக இன்றும் மணலி பகுதியில் பதட்டம் நிலவுகிறது. கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் 2-வது நாளாக போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.