தமிழ்ப் பிரதேசங்கள் திட்டமிட்டு தொடர்ந்து ஒதுக்கப்பட்டுக் கொண்டு வருகின்றன- தவராசா கலையரசன்

284 0

625-0-560-320-160-600-053-800-668-160-90-1நல்லாட்சி அரசாங்கம் உரிய நிலையான தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் கவலையோடு வேண்டுகோள் விடுத்தார்.

காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் அதன் தலைமையகத்தில் தலைவர் வெற்றி அருள்குமரன் தலைமையில் நேற்று நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில், யுத்தத்தால வடக்கு கிழக்கில் 90 ஆயிரம் விதவைகள் உருவாகியுள்ளனர். இதுவரை மூன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். யுத்தத்தால் புலம்பெயர்ந்து இந்தியாவில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் தமிழ் அகதிகள் தஞ்சமடைந்துள்ளனர். இன்னும் பதியப்படாமல் 15 ஆயிரம் தமிழர்கள் உள்ளனர். இந்நிலையில் தமிழ் மக்களின் விகிதாசாரம் குறையாமலா இருக்கும்?

இத்தனை இழந்தும் தமிழ் மக்களையும் தமிழ்ப் பிரதேசங்களையும் இன்னும் புறக்கணிப்பது நியாயமா? அம்பாறை மாவட்டத்திலுள்ள 07 தமிழ்ப் பிரதேசங்களில் ஏலவே தமிழ் இருப்புகள் அழிக்கப்பட்டிருந்தன. வீரமுனை திராய்க்கேணி, மீனோடைக்கட்டு என அடுக்கிக் கொண்டு போகலாம். வீரமுனையில் மட்டும் 232 தமிழ் மக்களை கொன்று குவித்தார்கள்.

இவ்வளவு இழப்புகளைச் சந்தித்தும் இன்னும் ஒதுக்கீடுகளில் தமிழ் மக்களைப் புறக்கணிப்பதென்பது கவலைக்குரியது. கிழக்கு மாகாண வரவு செலவுத் திட்ட அறிக்கையைப் பார்த்தால் புரியும். எந்த அமைச்சாக இருந்தாலும் நிலைமை மோசமாகத்தானிருக்கிறது.

கிழக்கில் தமிழ்ப் பாடசாலைகள் மிக அதிகம் இருந்தும் வளப் பகிர்வில் பாரபட்சம் காட்டப்படுகின்றது. கல்வியில் தமிழ்ச் சமுகம் பின்னடைந்து வருகின்றது. நல்லாட்சியில் கூட திட்டமிட்டு எமது தமிழினத்தை புறக்கணிக்கும் செற்பாடு தந்திரோபாயமாக நடக்கின்றது.

கறையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகுந்த கதையாகத்தான் தமிழ் மக்களின் நிலை மாறியுள்ளது. கஷ்டப்பட்டு போராடி இரத்தம் சிந்தி இழக்கக் கூடாததையெல்லாம் இழந்தவர்கள் தமிழினம். ஆனால் இன்று முளைத்த தலைவர்கள் வேறு கதையளக்கின்றார்கள்.

அது மாத்திரமல்ல. உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீட்டிலும் பாரபட்சம் நிலவுகின்றது. அதாவது தமிழ்ப் பிரதேசங்கள் திட்டமிட்டு தொடர்ந்து ஒதுக்கப்பட்டுக் கொண்டு வருகின்றன. சமாதானம் விட்டுக்கொடுப்பு என்பது இரு தரப்பிலும் இருக்க வேண்டும். இந்நிலை நீடித்தால் அம்பாறை தமிழர்களைக் காப்பாற்ற முடியாது போய்விடும் எனத் தெரிவித்தார்.