புதிய அரசியலமைப்பின் ஊடாக தேசிய இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு ஏற்பட வேண்டும் என்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகவும் உறுதியாக இருப்பதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் குறிப்பிட்டார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டதாக தெரியவந்துள்ளது.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஞாயிறுக்கிழமை காலை முதல் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி, அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டிருந்ததாக எம்.ஏ.சுமந்திரன் பிபிசியிடம் குறிப்பிட்டுள்ளார்.