அதிநவீன ஏவுகணையை செலுத்த தயாராகும் வடகொரியா

288 0

201701091043055881_n-korea-says-can-test-launch-icbm-at-any-time_secvpfகண்டம்விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணையை எந்நேரமும் செலுத்த தயாராக இருப்பதாக வடகொரியா அறிவித்துள்ள நிலையில் அதை சுட்டு வீழ்த்தப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது.

அந்த நாடு தொடர்ந்து 3 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி, அதிரடியாக அணுகுண்டை விட பல மடங்கு சக்திமிக்க ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்தது. இதுவும் அணுகுண்டு வகையில்தான் கணக்கில் கொள்ளப்படுகிறது. அதன்படி அந்த நாடு கடந்த ஆண்டுவரை 4 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளதாக சர்வதேச நாடுகள் பதிவு செய்துள்ளன.

இதன்காரணமாக, வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. எனினும், தற்காப்பு என்ற பெயரில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை விடாமல் நடத்தி வருகிறது.

இந்த ஏவுகணைகள் அனைத்தும் வடகொரியாவில் இருந்து சுமார் 3400 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள குவாம் தீவில் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கி அழிக்கும் ஆற்றல் படைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் செப்டம்பர் மாதம்வரை ஐந்துமுறை அத்துமீறலாக ஏவுகணை சோதனைகளை இந்நாடு நடத்தியுள்ளது.வடகொரியாவின் இந்த அத்துமீறலுக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

ஆனாலும், மாதந்தோறும் ஒருமுறையோ, இருமுறையோ இந்த ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொள்ள வடகொரியா தவறுவதில்லை. வடகொரியாவின் இந்த ஆணவத்துக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையை பல நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தின. இதன் அடிப்படையில் வடகொரியா மீது ஐ.நா.சபை சமீபத்தில் புதிய தடைகளை விதித்துள்ளது.

இதற்கிடையில், கடந்த முதல் தேதி புத்தாண்டு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றிய வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், தடை செய்யப்பட்ட நெடுந்தூர ஏவுகணைகளை தயாரிக்கும் பணிகள் நிறைவுகட்டத்தை எட்டியுள்ளதாக குறிப்பிட்டார்.

அமெரிக்காவை தாக்கும் நோக்கத்தில்தான் இதைப்போன்ற நெடுந்தூர ஏவுகணைகளை வடகொரியா தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், எந்த நேரத்திலும் அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டால் எந்த இடத்திலிருந்தும் உடனடியாக செலுத்தும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து செல்லும் ஏவுகணை சோதனைக்காக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக கொரியா அரசின் செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு அமெரிக்காவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவின் இந்த மிரட்டல் தொடர்பாக, நேற்று அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் ஆஷ் கார்ட்டரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஆஷ் கார்ட்டர், வடகொரியாவின் நெடுந்தூர ஏவுகணகள் மற்றும் அணு ஆயுதங்களை தயாரிக்கும் திட்டம் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வருவதாக குறிப்பிட்டார்.

நமது நாட்டிற்குட்பட்ட பகுதி மற்றும் நமது நட்பு நாடுகளுக்கு உட்பட்ட பகுதியை வடகொரியாவின் ஏவுகணைகள் நெருங்கினால் அவற்றை சுட்டு வீழ்த்துவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.