நான் நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சராக இருப்பதில் வெட்கமடைகின்றேன் -மனோ

291 0

1318903565mano_mp-1சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையாளிகளுக்கு நல்லாட்சி அரசாங்கத்தால் கூட தண்டனை வழங்க முடியாமல் போயுள்ளமை குறித்து வெட்கமடைவதாக தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற வெள்ளைவான் கலாசாரத்திற்கு எதிராக போராடியமையே லசந்த,தனது உயிரை பலிகொடுக்க காரணமாக அமைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு,எட்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, பொரளை கனத்தையில் நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

இந்த நிகழ்வில் லசந்த விக்ரமதுங்கவின் குடும்ப அங்கத்தவர்கள்,நண்பர்கள்,சக ஊடகவியலாளர் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் பங்கேற்றிருந்தனர்.

சபாநாயகர் கரு ஜயசூரியவுடன்,மங்கள சமரவீர, ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்ரம,மனோ கணேசன்,ஹர்ஷ டி சில்வா மற்றும் ஏரான் விக்ரமரட்ன உள்ளிட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அமைச்சராக செயற்பட்டவரும் பல்வேறு மனித உரிமை மீறல்களுடன் தொடர்புட்டவர் என குற்றஞ்சாட்டப்பட்டவருமான ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.

லசந்தவை நினைவுகூருவதற்கு இங்கு வெட்கத்துடனேயே நான் வந்தேன். நல்லாட்சி அரசாங்கத்தால் இதுவரை லசந்தவை கொலை செய்வதவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி சட்ட ரீதியாக தண்டனையை பெற்றுக்கொடுக்க முடியாது போயுள்ளது. நான் வெட்கப்படுகின்றேன்.

அமைச்சராக இருப்பதில் வெட்கமடைகின்றேன். லசந்த எங்களுடன் போராடிய ஒருவர். நானும் அந்த போராட்டத்தில் இருந்தேன்,வெள்ளைவான் கலாசாரத்திற்கு எதிராக ரவிராஜ் மற்றும் என்னுடன் லசந்த இருந்தார். வெள்வைான் கலாசாரம் மூலம் இடம்பெற்ற குற்றங்களை செய்தியிட யாரும் இருக்கவில்லை. நான் ஊடகவியலாளர்களை குற்றஞ்சாட்டவில்லை. அந்த அளவிற்கு ஊடகவிலாளர்களுக்கு அச்சுறுத்தல் இருந்தது.

அந்த அச்சுறுத்தலுக்கு முகம்கொடுப்பதில் லசந்த முன்னின்று செயற்பட்டார். அதற்கவே அவர் இழப்பீடு செலுத்தினார். அவர் உயிரிழக்க நேரிட்டது. கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்வதற்கு உத்தரவிட்டது ? யார் கொலை செய்தது யார் என்பது எமக்கு தெரியும். நாட்டு மக்கள் தவறான எண்ணத்தில் இருக்கின்றார்கள் என்றே நான் நினைக்கின்றேன்.

பாதுகாப்பு தரப்பினர் தொடர்புபட்ட யாராவது தவறிழைத்தால் அவர்களுக்கு சட்டத்தில் இருந்து விடுபடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அது தவறான எண்ணமாகும். நாம் எமது பாதுகாப்பு தரப்பினர் மீது அன்பு வைத்துள்ளோம். கடற்படை, விமானப் படை, இராணுவம், பொலிஸார் மீது அன்பு வைத்துள்ளோம். உண்மையில் பொலிஸாருக்கு இராணுவத்தினருக்கு ஏற்பட்ட அவகௌரவத்தை எவ்வாறு அகற்றுவது.? அதில் சிலர் இருக்கின்றனர்.

அவர்களுக்கு நாம் தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களுக்கு தண்டனை வழங்காமல், லசந்தவிற்கு மலரஞ்சலி செலுத்தி, மெழுகுதிரியை கொழுத்திவிட்டு செல்வதால் எந்தவித நன்மையும் ஏற்படாது. நான் வெட்கப்படுகின்றேன்.

மஹிந்த ராஜபக்ச காலத்தில் இடம்பெற்ற திருட்டு, கொள்ளை ஆட்கொலை என்பன பாரிய அளவில் உள்ளதன் காரணமாகவே, அது தொடர்பான வழக்கு விசாரணைகள் தாமதமடைவதாக லசந்த விக்ரமதுங்கவின் நினைவுகூரல் நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போது வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டினார்.

ஜனவரி மாதம் 8 ஆம் திகதி என்பது எமது நாட்டை பொறுத்தவரை மிகமுக்கியமான ஒருநாள். இரண்டு காரணங்களுக்காக இது முக்கியத்துவம் பெறுகின்றது. இலங்கையில் உருவாகிய மிகவும் கௌரமிக்க ஊடகவியலாளரான செய்தி ஆசிரியர் படுகொலை செய்யப்பட்ட தினம் போன்று  இதே தினத்தில் 2015 ஆம் ஆண்டு, நச்சு யுகத்தில் அல்லது எமன் நிர்வாகத்தில் இருந்து நாம் நல்லாட்சி எட்டி, இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தி அடைகின்றன.

இந்த நிலையில் லசந்தவின் படுகொலை தொடர்பான விசாரணை உள்ளிட்ட மேலும் பல விசாரணைகளை அரசாங்கம் என்ற வகையில் நாம் ஆரம்பித்திருக்கின்றோம். உண்மையில் மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற திருட்டு, கொலை, ஆட்கொலை சம்பவங்களின் அளவை எடுத்தால், இவ்வாறான தாமதம் இருப்பது தொடர்பில் புதுமைப்பட வேண்டியதில்லை.

எவ்வாறாயினும் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் அதுபோன்று எக்னலிகொடவின் மரணம் தொடர்பில் அதேபோன்று மஹிந்த ராஜபக்ச காலத்தில் இடம்பெற்ற ஊடகவிலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் அதேபோன்று மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் இடம்பெற்ற ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல் தொடர்பில், எனக்கு ஞாபகம் இருக்கும் வகையில் லசந்த கொலை செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் சிரச ஊடக நிறுவனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இது போன்ற சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். அதேபோன்று மஹிந்த ராஜபக்சின் ஆட்சிக்காலத்தில் சித்திரவதைக்கு உள்ளான ஊடகவிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு, ஊடக நிறுவனங்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என எண்ணத்தில் பிரதமரும் ஜனாதிபதியும் இருக்கின்றனர்.அது தொடர்பிலும் அமைச்சரவை பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும்