ஆப்கானிஸ்தானுக்கு 300 கடற்படை வீரர்களை அனுப்ப அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
தலீபான் தீவிரவாதிகளை கட்டுப்படுத்துவதற்காகவே அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்காவில் நியூயார்க் உலக வர்த்தக மையம், பென்டகன் ராணுவ தலைமையகம் ஆகியவற்றின் மீது கடந்த 2001ஆம் ஆண்டு அல்கொய்தா பயங்கரவாதிகள் வானூர்திகளை கொண்டு தாக்குதல் நடத்தினர்.
இதன்போது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்.
இதனை அடுத்து அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்கிய ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்து தலீபான்களை வீழ்த்தியது.
இதைத் தொடர்ந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டு தலீபான்களுக்கு எதிரான மோதலில் அந்த நாட்டு படைகளுக்கு உதவிபுரிந்தன.
யுத்தம் நிறைவடைந்து நாட்டில் இயல்பு நிலை திரும்பியவுடன் அமெரிக்க படைகள் அங்கிருந்து வெளியேறின.
இந்த நிலையில் தற்போது ஆப்கானிஸ்தானில் 8 ஆயிரத்து 500 அமெரிக்க வீரர்கள் மாத்திரமே பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களில் ஒரு பிரிவு ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2014ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்தில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற்றின.
இதனை அடுத்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களின் முன்னேற்றத்தை தடுக்க முடியாத நிலையில் அந்த நாட்டு இரணுவம் நேட்டோ படையினரிடம் தங்கள் பலத்தை அதிகரிக்க வேண்டும் என கோரியது.
இதற்கிணங்க, ஹெல்மாண்ட் மாகாணத்துக்கு 300 கடற்படை வீரர்களை அனுப்புவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது.