நாடு முழுவதும் கடந்த நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு முதல் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து, அனைத்து வங்கிகளிலும் பணம் பெறுவதற்காக இன்றுவரை பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர்.இதனால் கடந்த 2 மாதங்களாக அனைத்து அரசு மற்றும் தனியார் ஏடிஎம் மையங்கள் செயல்படாமல் மூடியுள்ளன. மேலும், ஒரு சில வங்கிகளில் அளிக்கும் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டை சில்லறையாக மாற்ற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை புறநகர் பகுதிகளான புழல், செங்குன்றம், மாதவரம், சோழவரம் உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளில், ஏற்ெகனவே புழக்கத்தில் உள்ள ரூ.10 நாணயங்களை மக்களிடம் இருந்து பெறுவதற்கு வியாபாரிகள் மறுத்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் ₹10 நாணயம் செல்லாது என வதந்தி கிளம்பவே, அப்பகுதி மக்கள் வங்கிகளுக்கு படையெடுக்க துவங்கினர். இதைத் தொடர்ந்து, 2 விதங்களில் வெளியிடப்பட்ட பழைய ரூ.10 நாணயங்கள் செல்லும் என சமீபத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்தது. எனினும், இந்த ரூ.10 நாணயங்களை மக்கள் வங்கிகளில் அதிகளவில் டெபாசிட் செய்ய எடுத்து சென்றால், அவற்றை வங்கி அதிகாரிகள் எண்ணுவதற்கு தயங்கி வாங்க மறுக்கின்றனர். இதேபோல், கடைகளில் ரூ.10 நாணயங்களை வழங்கினால், அவற்றை வியாபாரிகளும் வாங்க தயங்குகின்றனர். இதனால் பல்வேறு இடங்களில் இரு தரப்பினருக்கும் அடிக்கடி வாக்குவாதம், தகராறு ஏற்படுவதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.எனவே, இப்பிரச்னையில் மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் உரிய கவனம் செலுத்தி, ரூ.10 நாணயம் தொடர்பாக வங்கிகள், வியாபாரிகள் மற்றும் மக்கள் மனதில் உள்ள அச்சத்தை நீக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.