பூர்த்தியற்ற தீர்வுகளை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்கிறார் டக்ளஸ்

315 0

douglasதமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யாத எந்த தீர்வையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், புதிய அரசியமைப்பு தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் பலராலும் முன்வைக்கப்பட்டாலும், தமிழ் மக்கள் இன்னும் தமது நம்பிக்கையைக் கைவிடவில்லை.

எனவே தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வை வழங்கக் கூடியவாரான பரிந்துரைகள் புதிய அரசியலமைப்பில் உள்ளடங்கியிருக்க வேண்டும் என்பதே எமது விருப்பமாகும் என்று ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடனான நேற்றைய (7) சந்திப்பில் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த. மற்றும் தற்போதைய செயலாளர் அமைச்சர் மகிந்த அமரவீர ஆகியோருடனான சந்திப்பு நேற்றையதினம் கொழும்பில் அமைந்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை தென் இலங்கை கட்சிகளுக்கு தெளிவுபடுத்துவதும், அர்த்தமுள்ள தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்ற போதே இன ஐக்கியத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதையும் நோக்கமாகக் கொண்டு தென் இலங்கை அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புக்களை தொடர்ச்சியாக சந்தித்துவரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மற்றுமொரு சந்திப்பாகவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர்களுடனான குறித்த சந்திப்பும் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினை அதற்காக எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு, தேசிய நல்லிணக்கம் அர்த்தபூர்வமாக முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் மற்றும் நிகழ்கால அரசியல் விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இந்தச் சந்திப்பின்போது கருத்துத் தெரிவித்த செயலாளர் நாயகம் அவர்கள், தமிழ் மக்கள் புதிய அரசியலமைப்பு ஊடாக தமக்கு நியாயமான அரசியல் தீர்வு கிடைக்கும் என்று நம்புகின்றார்கள். தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் அடிப்படைகளைக் கொண்டதாகவே அரசியல் தீர்வு அமைய வேண்டும்.

தென் இலங்கையில் தற்போது தலைதூக்கியுள்ள அரசியல் தடுமாற்றங்களால், புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு தவறவிடப்பட்டுவிடக் கூடாது.

தென் இலங்கை அரசியல் குழப்பங்கள், ஈ.பி.டி.பியைப் பொறுத்தவரை அக்கறை செலுப்படக் கூடியவை இல்லை என்றபோதும், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு கிடைக்கப்பெறுகின்ற சூழலை பாதுகாப்பதற்கு எமது பங்களிப்பை நாம் பூரணமாக வழங்குவோம் என்றும் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில், செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கட்சியின் நிர்வாகிகளும் கலந்து கொண்டிருந்தனர்.