சசிகலாவின் பதவியேற்பும் ஈழத்தமிழர்களும்- சி.அ.யோதிலிங்கம்

359 0

cc__largeஅனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளராக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும் ஜெயலலிதாவுடன் ஒன்றாக வாழ்ந்தவரும் கழகத் தொண்டர்களினால் சின்னம்மா என அழைக்கப்படுபவருமான சசிகலா நடராஜன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக பலவாதப் பிரதிவாதங்கள் நிகழ்கின்றபோதும் கட்சியின் ஒரு பிரிவினர் சசிகலாவிற்கு எதிராக போர்க்கொடி உயர்த்துகின்றபோதும் அவர் உத்தியோக பூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். இன்னும் சில நாட்களில் முதலமைச்சராகவும் பொறுப்பேற்கவுள்ளார்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதும் அவரைப் பின்னால் நின்று வழிநடாத்தியவர் சசிகலா என்றே பேசப்படுகின்றது. இதனால் கட்சி நிர்வாகத்தையும் மாநிலநிர்வாகத்தையும் திறம்பட நடாத்தக்கூடிய ஆற்றல் அவருக்கு இருக்கின்றது என்றும் கூறப்படுகின்றது. அவருடைய கணவர் நடராஜன் முன்னர் நிர்வாக அதிகாரியாக இருந்தபடியால் அவருடைய வழிகாட்டல்களும் சசிகலாவிற்கு பயன்படக்கூடியதாக இருக்கும்.

தமிழ்நாட்டில் மக்கள் சாதிரீதியாக பிளவுண்டிருக்கின்றனர். தி.முக.வின் சாதியத்தனம் என்பது முக்குலத்தோர், கொங்கு வேளாளர், பறையர், கூட்டுத்கான் அதுவும் முக்குலத்தோர் சாதி அ.தி.மு.கவிற்கு அடிப்படைப் பலம்.சசிகலா அந்தச் சாதியைச் சேர்ந்தவரே. ஜெயலலிதாவிற்கு சசிகலா வெறுமனவே உளவியல் பலத்தினை மட்டும் கொடுக்கவில்லை. மறாத மிகப்பெரும் மக்கள் பலத்தையும் கொடுத்திருந்தார். இச்சாதி தமிழ்நாட்டில் எண்ணிக்கையிலும் அதிகம். இது சசிகலாவிற்கு மிகப்பெரும் பலத்தைக் கொடுக்கும். திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகளுடன் கூட்டணி அமைப்பது பற்றியும் தற்போது பேசப்படுகின்றது. இது பறையர் சமூகத்தின் ஆதரவை அதிகளவில் பெறுவதற்கும் உதவும்.

சசிகலாவிற்கான சவால்களும் குறைந்தவையல்ல. சொந்தக் கட்சி, எதிர்க்கட்சி, மத்தியரசு எனப் பலபக்கங்களிலிருந்தும் சவால்கள் உள்ளன. கட்சிக்குள் ஒரு பிரிவினர் முன்னரே கூறியது போல எதிர்ப்பாக உள்ளனர். ஜெயலலிதாவின் அண்ணா மகள் தீபாவும் எதிர்பபாகவுள்ளார். பன்னீர்ச்செல்வம் கூட இராஜினாமாக் கடிதத்தை விருப்பத்தோடு கொடுத்தார் எனக்கூறி விட முடியாது. ஒரு பிரிவு தொண்டர்களும் அதிர்ப்தியாகவுள்ளனர். ஜெயலலிதா மரணத்திலும் அவர்கள் சசிகலா மீது சந்தேகப்படுகின்றனர். இத்தகைய எதிர்ப்புக்கள் ஜெயலலிதவிற்கும் ஆரம்பத்தில் இருந்தவைதான். அதுவும் சசிகலாவை விட அதிகமாக இருந்தது எனலாம். கட்சி ஜெயலிலதா அணி, ஜானகி அணி என இரண்டாகப் பிளவுபட்டிருந்தது. இரட்டை இலைச் சின்னமும் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. சசிகலாவும் அவரது மன்னார்குடிபடையும் ஜெயலலிதாவிற்கு பக்கபலமாக இருந்தது. ஜெயலலிதா போராடி வெற்றிபெற்றார். சசிகலாவும் அவ்வாறு வெற்றிபெறக்கூடும்.

தமிழ்நாடு எதிர்க்கட்சிகளும் சசிகலாவிற்கு ஒரு சவாலாக இருக்கும். தி.மு.க தான் மிகப்பெரிய சவால்.அ.தி.மு.க கட்சியிலிருந்து தி,மு.க பலரை கழட்டப்பார்க்கும். ஏற்கனவே கட்சியின் பிரச்சாரச் செயலாளர் நாஞ்சில்சம்பத் தனது பதவியை இராஜினாமாச் செய்திருக்கின்றார். அவர் தி.மு.க வில் சேரப்போவதாகவும் செய்திகள் அடிபடுகின்றன. இவர் முன்னர் வைகோவின் ம.தி.மு.க.வில் இருந்தவர். வைகோவுடன் முரண்பட்டுக்கொண்டு அ.தி.மு.க.வில் சேர்ந்தார். ஜெயலலிதா வழங்கிய காரையும், அ.தி.மு.க. அலுவலகத்தில் ஒப்படைத்திருக்கின்றார். தி.மு.க.வின் சாதியத்தனம் நாடார் – வன்னியர் – பள்ளர்சாதிக் கூட்டாக உள்ளது. இந்த எதிர் எதிர்சாதிக்கூட்டுகள் ஏனைய சாதிகளுடன் எவ்வாறு கூட்டை உருவாக்குகின்றன என்பதும் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும்.

சசிகலா இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றால் தான் அவரது முதலமைச்சர் பதவி நிரந்தரமாக இருக்கும். ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியில் அவர் போட்டியிட முன்வரலாம். தனது வெற்றி பலவீனமாக இருக்கும் எனக் கருதினால் பா.ம.க, ம.தி.மு.க இடதுசாராகளுடன் அவர் கூட்டணி அமைக்க முற்படலாம். தற்போதைக்கு இவை அவசரமில்லை ஆனால் இதற்கும் தயார்நிலையில் இருக்க முயற்சிப்பார்.

மத்திய அரசோ, பா.ஜ.கவோ சசிகலாவின் வருகையை பெரிதும் விரும்பும் எனக் கூறமுடியாது. சசிகலா இன்னோர் ஜெயலலிதாவக இருப்பார் என்ற சந்தேகம் இவற்றிற்கு உண்டு. ஜெயலலிதா மத்திய அரசிற்கு பெரிதாக கட்டுப்படுவதில்லை. மாநிலங்களின் உரிமைகளையும் ஒருபோதும் விட்டுக்கொடுப்பதில்லை. இது விடயத்தில் மற்றைய முதலமைச்சர்களுக்கு ஜெயலலிதா முன் மாதிரியாக இருந்தார். அ.தி.மு.க தனிப் பெருங்கட்சியாக தமிழகத்தில் இருந்ததினாலும் மத்தியில் அ.தி.மு.க வின் உதவி பா.ஜ.கவிற்கு தேவைப்பட்டதாலும் ஜெயலலிதாவை மத்திய அரசு சகிகத்துக்கொண்டிருந்தது.

சசிகலாவை தாம் கையாள்வது கடினம் என்பற்காகவும், பன்னீர்ச் செல்வத்தை பொம்மையாக கையாளலாம் என்பதற்காகவும் பன்னீர்ச் செல்வம் முதலமைச்சராக தொடருவதையே பா.ஜ.கவும் மத்திய அரசாங்கமும் விரும்பியிருந்தது. பன்னீர் செல்வத்தை எந்தக்கட்டதிலும் முதலமைச்சர் பதவியை இராஜினமாச் செய்ய வேண்டாம் எனவும் ஆலோசனை கூறியிருந்தது. பன்னீர்ச்செல்வம் முதலமைச்சராக வந்தவுடன் ஜெயலலிதமா தடுத்து வைத்திருந்த மத்திய அரசின் திட்டங்களையும் அவசர அவசரமாக செயற்படுத்தியது. ஆனாலும் சசிகலா நேர்த்தியாக காய் நகர்த்தி பன்னீர்ச் செல்வத்திடமிருந்து இராஜினமாக் கடிதத்தைப் பெற்றிருக்கின்றார். இது மத்திய அரசாங்கத்தின் அணுகுமுறையில் முதல் கட்டத் தோல்வியே.

தற்போது மத்திய அரசிற்கு இருக்கின்ற ஒரேயொரு ஆயுதம் சசிகலாவிற்கு எதிரான ஊழல் வழக்குகளைத் துரிதப்படுத்துவது தான். இந்த வழக்குகளை வைத்துக்கொண்டு சசிகலாவுடன் பேரம் பேசலிலும் இறங்கலாம். பாராளுமன்றத்தேர்தலில் ஒருசில ஆசனங்களையாவது தமிழ் நாட்டில் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை பா.ஜ.க விற்கு உண்டு. மாநில தேர்தலிலும் சில ஆசனங்களுக்கு ஆசைப்படலாம். எனவே கூட்டணிக்கு வரும்படி நிர்ப்பந்தம் கொடுக்கலாம். சசிகலாவும் கள நிலவரத்தைப்பொறுத்து இது விடயத்தில் முடிவு செய்யலாம். தேசியக் கட்சிகளைப் பொறுத்தவரை கூட்டணி வைப்பதில் எட்ட நிற்கவே சசிகலா முற்படுவார். கூட்டணி அமைக்க வேண்டும் என்ற நிர்பபந்தம் வந்தால் முதலில் மாநிலக்கட்சிகளுகு;குத் தான் முதலிடம் கொடுப்பார். அதன்பின்தான் தேசியக்கட்சிகள் பற்றி யோசிப்பார். எது எப்படியிருப்பினும் சசிகலா சந்திக்கும் மிகப்பெரிய சவால் மத்திய அரசாங்கமும், பா.ஜ.க வாசவுமே இருக்க முடியும்.

காங்கிரசுடன் பெரிய உறவை வைத்திருப்பதற்கு சசிகலாவும் விரும்பமாட்டார். காங்கிரஸ் கட்சியும் விரும்பமாட்டாது. ஈழத்தமிழர்கள் காங்கிரஸ் கட்சியை மிகப்பெரிய எதிரியாகப் பார்ப்பதால் காங்கிரசுடன் உறவு வைத்திருப்பதை சசிகலா தவிர்க்கப்பார்ப்பார். இதைவிட காங்கிரஸ் கட்சியின் வாக்குவங்கியும் தமிழ்நாட்டில் சரிந்திருக்கின்றது. வேண்டுமானால் வாசனின் தமிழ்மாநில காங்கிரசுடன் கூட்டணிக்குச் செல்லலாம்.

அ.தி.மு.கவிற்கு பாராளுமன்றத் தேர்தலில் விழுந்த வாக்குகள் சட்டமன்றத்தேர்தலில் விழவில்லை. மக்கள் நலக்கூட்டணி தனித்துவப் போட்டியிருக்காவிட்டால் அ.தி.முக மேலும் பின்னடைவைச் சந்தித்திருக்கும் நீண்டகாலமாக தமிழ்நாட்டில் கூட்டணிக்கலாச்சாரமே நீடித்தது. ஜெயலலிதா அதனை உடைத்தார். ஆனால் அந்த உடைப்பு நிரந்தரமானதாக இருக்கவில்லை.மீண்டும் கூட்டணிக்கலாச்சாரமே ஆதிக்கத்திற்கு வரப் போகின்றது.

இங்கு எழும் முக்கிய கேள்வி ஈழத்தமிழர் விவகாரத்தில் சசிகலா என்ன நிலைப்பாட்டை எடுப்பார் என்பதே. ஈழத்தமிழர் விவகாரத்தில் சசிகலா ஜெயலலிதாவின் நிலைப்பாட்டையே பின்பற்றுவார். போர்முடிவிற்கு பின்னர் ஜெயலலிதா ஈழத்தமிழர் விவகாரத்தில் ஆதரவுநிலைப்பாட்டை எடுப்பதற்கு மூன்று காரணங்கள் இருந்தன. அதில் ஒன்று கருணாநிதியின் செல்வாக்கில் தான் ஆ.பு.சு க்கு பிறகு ஈழத்தமிழர் விவகாரம் இருந்தது. ஆனால் போர்க்காலத்தில் காங்கிரசுடன் இணைந்து போருக்கு ஆதரவாக கருணாநிதி செயற்பட்டமையாலும் ஆளும் கட்சியாகவும் காங்கிரசிடம் கூட்டணி அங்கம் வகித்தும் இருந்ததினால் அழிவுகளைத் தடுக்கும் ஆற்றல் இருந்தும் தடுப்பதாக பொய்கூறியமையினாலும் ஈழத்தமிழர் விவகாரத்தில் அவருடைய ஆதிக்கம் தகர்ந்தது. தகுந்த நேரம் பார்த்து ஜெயலலிதா அதனைத் தன்கையில் எடுத்தார்.

இதற்கு முன்னர் விடுதலைப்புலிகளை அவர்கடுமையாக எதிர்த்தவர் தான். போர் என்றால் மக்கள் இறப்பார்தானே என்றும் கூறியவர்தான். இதற்கு கருணாநிதியின் கைகளில் விவகாரம் இருந்ததே பிரதான காரணம். அவரிடம் ஆதிக்க நிலையில் இருந்து பார்ப்பனீய சிந்தனையும் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் விவகாரம் தனது கைகளுக்கு வந்ததும் நிலைப்பாட்டை மாற்றினார். ஈழத்தமிழர் விவகாரதத்தில் உறுதியான நிலை எடுத்தார். இது விடயத்தில் கருணாநிதி போல பம்மாத்துகாட்ட முயற்சிக்கவில்லை.

இரண்டாவது காரணம் போருக்கு பின்னர் ஈழத்தமிழர் ஆதரவுநிலை என்பது தமிழ்நாட்டின் பொதுக்கருத்தாக வளரத்தொடங்கியது. முள்ளிவாய்க்கால் படுகொலை தமிழ்நாட்டு மக்களை ஆழ்ந்த கவலைக்குள்ளாக்கியது. மக்களுக்கு அழிவின் கவலை ஒரு புறமிருக்க வளர்ச்சியடைந்த போhராட்டத்தை தம்மால் பாதுகாக்க முடியவில்லையே குற்றவுணர்வும் பெரிதும்வாட்டியது. இந்த இருதுயரங்களும் தி.மு.கவிற்கும் காங்கிரஸி;ற்கும் எதிராக அவர்களைத் திருப்பின. பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.கவும் காங்கிரசும் படுதோல்வியடைந்தமைக்கும் இதுவே பிரதான காரணமாகும். இந்தப் பொதுக்கருத்தை நிராகரிக்க ஜெயலலிதா விரும்பவில்லை. அவரால் அதனை நிராகரிக்கவும் முடியாது. விளைவு பொதுக்கருத்தை உச்சவகையில் பேணும் ஒருவராக அவர் மாறினார்.

மூன்றாவது தமிழ்நாட்டில் இயங்கும் ஈழ ஆதரவு சக்திகளை கொஞ்சம் அமத்திவைத்திருப்பது. அவர்கள் தீவிரமாகச் செயற்படும் போது அது இந்திய அரசியல் முறைமைக்கு எதிராகச் செல்லும். மக்களும் அதனை ஆதரிக்க முற்படலாம். இதனால் கிளர்ச்சி நிலை உள்ளது எனக் கூறி மத்திய அரசு தமிழ் நாட்டில் தலையிடலாம். அத்தலையீடு மாநில அரசாங்கத்திற்கும் அழுத்தத்தைக் கொண்டுவரும். அதனைத் தவிர்ப்பதற்கு அவர்களது கோரிக்கைகளை தானே உச்ச வகையில் எடுக்க முற்பட்டார். இதன்மூலம் மக்களின் உணர்வுகளுக்கு வடிகாலாக இருந்ததோடு ஈழஆதரவு சக்திகளையும் அடக்கி வாசிக்கச் செய்தார்.

உண்மையில் ஜெயலலிதாவின் ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்விற்கு சர்வஜனவாக்கெடுப்பு நடைபெறவேண்டும் என்ற தீர்மானமும், இனப்படுகொலைகக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்ற தீர்மானமும் இந்திய அரசியல் முறைமைக்கே சவால்விடும் வகையில் அதி உச்சமாக இருந்தன. இது இந்திய அரசியல் முறைமைக்கு மட்டுமல்ல இந்திய வெளிவிவகாரக் கொள்கைக்கே சவாலாக இருந்தது. இது விடயத்தில் தனது கொள்ளளவை மீறிச் செயற்பட்டார் என்றே கூறவேண்டும்.

ஜெயலலிதாவிற்கு இருந்த அந்த மூன்று காரணங்களும் சசிகலாவிற்கும் இருக்கின்றன. சசிகலா தனதும் கட்சியினதும் இருப்பைப் பேணுவதற்கு ஈழத்தமிழர்விவகாரத்தில் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை பின்பற்றியே ஆகவேண்டும். இதைவிட அவர் அக்கறைப்படுவதற்கு இன்னோர் காரணமும் உண்டு. அது இவரது கணவர் நடராஜன் ஈழப்போராட்ட ஆதரவளராக இருப்பதுதான். தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் முற்றம் அமைப்பதிலும் இவரது பங்கு பாரியதாக இருந்தது. இவரும் ஈழத்தமிழர் விடயத்தில் சசிகலா செயற்படுவதற்கு செல்வாக்குச் செலுத்தலாம்.