லக்கிம்பூர் வன்முறை- மத்திய மந்திரி மகனின் ஆதரவாளர்கள் கைது

170 0

லக்கிம்பூர் வன்முறை சம்பவம் குறித்த அறிக்கையை நாளைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூரில் கடந்த 3-ந்தேதி பா.ஜ.க.வினர் சென்ற கார், போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது மோதியது. இதில் இரண்டு விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது. மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
லக்கிம்பூர் வன்முறை சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ள நிலையில், குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன்படி, இன்று மத்திய மந்திரி மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் ஆதரவாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆஷிஷ் மிஸ்ரா எங்கு இருக்கிறார் என தெரியவில்லை.
முன்னதாக லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது லக்கிம்பூர் வன்முறை சம்பவம் குறித்த அறிக்கையை நாளைக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அறிக்கையில் இதுவரை செய்யப்பட்டுள்ள வழக்குப்பதிவு, கைது செய்யப்பட்டவர்கள் பெயர்கள் போன்ற விவரங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்’’ என்று உத்தர பிரதேச மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.