மலேரியா நோய்க்கு முதல் தடுப்பூசி- உலக சுகாதார அமைப்பு பரிந்துரை

162 0

தடுப்பூசி மூலம் கடுமையான மலேரியாவை 30 சதவீதம் குறைக்க முடியும் என்று உலக சுகாதார அமைப்பின் தடுப்பூசிகள் மற்றும் உயிரியல் துறையின் இயக்குனர் கேட் ஓ பிரையன் தெரிவித்தார்.

மலேரியா காய்ச்சலால் ஆண்டுக்கு 20 கோடி பேர் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் ஆண்டுக்கு 4 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள்.

இதில் பெரும்பாலும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த குழந்தைகள் அதிகளவில் மலேரியாவால் பாதிக்கப்படுகிறார்கள்.

மலேரியா காய்ச்சலை தடுப்பதற்கான தடுப்பூசியை கிளாக்சோ ஸ்மித்கிளைன் நிறுவனம் கடந்த 1987-ம் ஆண்டு உருவாக்கியது. ஆனால் அந்த தடுப்பூசியின் செயல்திறன் குறைவாக இருந்ததால் அதை மேம்படுத்துவதற்காக ஆய்வுகள் நடத்தப்பட்டன.

அதைத் தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து கானா, கென்யா, மாலவி ஆகிய நாடுகளில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மலேரியா தடுப்பூசி செலுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது. மொத்தம் 20 லட்சம் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.

இந்த ஆராய்ச்சியில் பெறப்பட்ட முடிவுகளின்படி மலேரியாவை தடுப்பதற்கான ஆர்.டி.எஸ்.5/ ஏ.எஸ்.01 என்ற தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்து பரிந்துரைத்துள்ளது.

உலகின் முதல் மலேரியா தடுப்பூசி இதுவாகும். இந்த தடுப்பூசியை ஆப்பிரிக்க மற்றும் மலேரியா பரவும் பிற பிராந்தியங்களில் உள்ள குழந்தைகளுக்கு செலுத்தவும், 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு நான்கு டோஸ் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் முதல் முறையாக மலேரியா தடுப்பூசியை ஆப்பிரிக்காவைச் சேர்ந்த குழந்தைகள் பெற இருக்கிறார்கள்.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியதாவது:-

உலகின் முதல் மலேரியா தடுப்பூசியின் பயன்பாட்டை பரிந்துரைத்துள்ளோம். இது வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்றார்.

தடுப்பூசி மூலம் கடுமையான மலேரியாவை 30 சதவீதம் குறைக்க முடியும் என்று உலக சுகாதார அமைப்பின் தடுப்பூசிகள் மற்றும் உயிரியல் துறையின் இயக்குனர் கேட் ஓ பிரையன் தெரிவித்தார்.

வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிராக பல தடுப்பூசிகள் உள்ளன. மனித ஒட்டுண்ணிக்கு எதிரான தடுப்பூசியை பரவலாக பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு முதல் முறையாக பரிந்துரைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.