20 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

156 0

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நெல் கொள்முதல் பிரச்சினையில் முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு அவர்களின் வாழ்வு வளம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழகம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்கான பணிகளை தொடங்கியுள்ள நிலையில், மத்திய அரசின் உத்தரவுப்படி 17 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் கொள்முதல் செய்யப்படுகிறது.

ஆனால் டெல்டா மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்துவருவதன் காரணமாக ஈரப்பதம் 20 சதவீதத்திற்கு மேல் உள்ளதால் கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு அறுவடைப்பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த ஈரப்பதத்தை சுட்டிக்காட்டி நெல் கொள்முதல் செய்யப்படவில்லை.

இவ்வாறு கொள்முதல் செய்யாத பட்சத்தில் விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமாகிவிடும் என்றும், விவசாயிகளும், விவசாயிகள் சங்கங்களும் தெரிவிப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

எனவே, முதல்-அமைச்சர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நெல் கொள்முதல் பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு, தமிழ்நாட்டின் பருவ நிலையைக் கருத்தில் கொண்டு, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெல் முழுவதும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு செல்லும் வகையில் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யவும், நெல் கொள்முதலை அதிகரிக்கவும் தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, விவசாயிகள் வாழ்வு வளம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.